அடையாள ஆவணப் பிரச்சனையை அறிவுபூர்வமாக அணுக வேண்டும்!

கோலாலம்பூர், மார்ச் 15-

குடியுரிமை இல்லாத சிவப்பு நிற பிறப்பு பத்திரங்களைப் பற்றி அண்மைய காலமாக சமூக வலைதளங்களிலும், அச்சு ஊடகங்களிலும் அனுதினமும் விவாதிக்கப்பட்டு வருவதை காண முடிகிறது. பல ஆண்டுகளாக அடையாள ஆவண பிரச்சனைகளைக் களைவதற்காக தேசிய பதிவு இலாகாவுடன் இணைந்து செயலாற்றி வரும் டிரா மலேசியாவின் தேசிய தலைவர் சரவணன் சின்னபனிடம் இது தொடர்பாக வினவிய போது; குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமை மறுக்கப்படுவதற்கான நடப்பில் உள்ள காரணங்களை பின்வருமாறு பட்டியலிட்டார்.

அ) தாய் அந்நிய நாட்டவராகவும் தந்தை மலேசியராகவும் இருக்கும் பட்சத்தில்; அவர்கள் தங்களுடைய திருமணத்தை மலேசிய சட்டப்படி பதிவு செய்யவில்லை என்றால் அவர்களுடைய குழந்தைக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்படமாட்டாது.

ஆ) தந்தை, தாய் மலேசியாவிலேயே பிறந்தவராக இருந்தாலும்; அவரிடம் ஆவணங்கள் ஏதும் இல்லாததால் (நாடற்றவர்) தங்களுடைய திருமணத்தைச் சட்டபடி பதிவு செய்ய முடியாது. அச்சூழலில் அவர்களுடைய குழந்தைக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது.

இ) தந்தை மலேசியராகவும் தாய் மலேசியாவின் தற்காலிக குடியுரிமை (பச்சை அடையாள அட்டை) பெற்றவராக இருந்தாலும், அவர்கள் தங்களுடைய திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றால் அவர்களுடைய குழந்தைக்கு மலேசிய குடியுரிமை கிடைக்காது.

ஈ) பெற்றோர்கள் இருவரும் மலேசியராக இருந்தாலும்; அவர்கள் தங்களுடைய திருமணத்தைப் பதிவு செய்யாத சூழலில், குழந்தை பிறந்ததற்கு பிறகு தாய் தலைமறைவாகிவிட்டாலும், அவர்களுடைய குழந்தைக்கு மலேசிய குடியுரிமை கிடைப்பதில்லை அல்லது குழந்தையின் குடியுரிமை உறுதிப்படுத்தப்படவில்லை என பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்படும்

உ) பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகளுக்கு வளர்ப்பு பெற்றோர்களோ பாதுகாவலர்களோ பிறப்பு பத்திரம் பெற முடியும். இருப்பினும் அக்குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படமாட்டாது.

ஊ) அந்நிய நாட்டவருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்படமாட்டாது.

குடியுரிமையற்ற பிறப்பு சான்றிதழ் பெற்றிருக்கும் குழந்தைகள் கல்வியைப் பெறவும், மருத்துவ வசதிகளுக்கும் கூட அந்நியநாட்டவருக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டுயுள்ளது. மேலும், அனைத்து அடிப்படை வசதிகளைப் பெறுவதிலும் இவர்கள் புறந்தள்ளப்டுகின்றனர்.

இப்பிரச்சனைக்கான காரணங்களை நன்கு ஆராயும் போது பெற்றோர்கள் தங்களுடைய திருமணத்தைப் பதிவு செய்து கொள்வதால் குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு உறுதிசெய்யப்படுவதால்; பெற்றோர்கள் தங்களுடைய திருமணத்தை குழந்தைகள் பிறக்கும் முன்பே பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதனால், எதிர்காலத்தில் சிவப்பு நிற பிறப்பு பத்திர பதிவுகள் வெகுவாக குறையும் என்றும் அவர் கூறினார்.

மலேசிய அரசியலைமைப்புச் சட்டபடி
அ) பெற்றோர்களின் ஒருவர் மலேசியராக இருந்தாலோ;
ஆ) சட்டப்படி தத்தெடுக்கும் பெற்றோர்கள் மலேசிய குடியுரிமை பெற்றிருந்தாலோ

அவர்களுடைய குழந்தைகள் மலேசிய குடியுரிமை பெற தகுதியானவர்கள் என குறிப்பிடுகின்றது. தேசிய பதிவு இலாகா நமது அரசியல் சாசனத்தில் உள்ள இந்த நிபந்தைகளை செயல்படுத்தினாலே தற்போது குடியுரிமை பெற்றிருக்காத பல குழந்தைகளின் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறினார்.