ம.இ.கா.வை குற்றம் சாட்டிய துன் டாக்டர் மகாதீர்!

0
6

கோலாலம்பூர், மார்ச் 15-
நாட்டின் பிரதமராக 22 ஆன்டுகள் தாம் பணியாற்றிய காலத்தில் ம.இ.கா. இந்தியர்களின் உண்மை நிலையையும் பிரச்னைகளையும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என முன்னாள் பிரதமரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் குற்றம் சாட்டினார்.

அரசாங்கத்தில் தாம் இருந்த போது ம.இ,கா.வின் தலைவர் கூறியதை மட்டும்தான் கேட்டதாகவும் அவர் கூறினார். ஹிண்ட்ராப் ஏற்பாட்டில் நேற்று கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பளி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய துன் மகாதீர் கூறினார்.

இந்திய சமுதாயத்திற்கு நான் ஒன்றும் செய்யவில்லை என கூறுவதில் நியாயம் இல்லை. அம்னோவிலிருந்து விலகிய பின்னர் மற்ற கட்சியில் இணைந்த பிறகுதான் இந்தியர்கள் பல பிரச்னைகளை எதிர்நோக்கி வந்துள்ளது எனக்கு தெரிய வந்தது. இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் முதன்மைக் கட்சியான ம.இ.கா.வின் கோரிக்கை மற்றும் தகவலுக்கு ஏற்ப கடந்த 22 ஆண்டுகள் இந்தியர்கள் விவகாரங்களில் தாம் செயல்பட்டதாக கூறிய அவர், அக்காலக்கட்டத்தில் ம.இ.கா.வின் தேசியத் தலைவராக இருந்த துன் டாக்டர் சாமிவேலுவின் பெயரை குறிப்பிடவில்லை.

மேலும், அந்த ம.இ.கா. தலைவர் தனது பதவிக்கு பிரச்னை வருவதற்கு அனுமதிக்காததோடு டஹ்னக்கு சவால் விடுபவர்களை கட்சியிலிருந்து நீக்கியதாகவும் தாம் அரசாங்கத்திலிருந்து விலகிய பின்னரும் அவர் பதவியில் நீடித்ததாக அவர் சொன்னார். தற்போது, இந்தியர்களின் சமூகநலத்தை பேணிக் காப்பதற்கு ஏற்புடைய கட்சியாக ம.இ.கா. இல்லை. நம்பிக்கைக் கூட்டணியிலுள்ள பி.கே.ஆர். ஜ.செ.க. முதலானவற்றில் அதிகமான இந்திய பிரதிநிதிகள் இருப்பதாகவும் துன் மகாதீர் கூறினார்.

 

மகாதீர் காலத்தில் தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்களுக்கு நிதிகளை கெஞ்சி பெற வேண்டியிருந்தது!
துன் டாக்டர் சாமிவேலு

இதற்கு முன்னர் இந்தியா மற்றும் தெற்கிழக்காசிய நாடுகளுக்கான சிறப்பு கட்டமைப்பு தூதர் துன் டாக்டர் சாமிவேலு, துன் மகாதீர் தலைமைத்துவத்தின் கீழ் பல ஆண்டுகள் சேவையாற்றியதால் அவரை பற்றி தவறாக பேச விரும்பவில்லை என ஒருமுறை நேர்க்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

அவர் மீது மிகுந்த மரியாதையைத் தாம் கொண்டிருப்பதால் அவர் என்னைப் பற்றி தவறாக பேசினாலும் அவரை தாம் ஒரு போதும் தவறாக பேச மாட்டேன் என துன் சாமிவேலு குறிப்பிட்டிருந்தார். துன் மகாதீரின் காலத்தில் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களான தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்களுக்கு அவரிடம் கெஞ்சி நிதியைப் பெறுவதாக இருந்தது. ஆனால், நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஆலயங்களுக்கும் நிதிகளை வாரி வழங்குவதாக அவர் சொன்னார்.

மகாதீர் மீது விசுவாசமும் மரியாதையையும் தாம் கொண்டிருந்தாலும் தேசிய முன்னணிக்கும் பிரதமர் நஜீப்பிற்கும்தான் தன்னுடைய ஆதரவு என துன் டாக்டர் சாமிவேலு கூறியிருந்தார். இதனிடையே, துன் மகாதீரின் குற்றச்சாட்டு குறித்து ம.இ.கா.வினர் கூறுகையில், நாட்டை வழிநடத்திய முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு இந்தியர்களின் பிரச்னைகள் தெரியாமல் போனதாக கூறுவது நம்ப முடியாதது என்றும் தற்போது அவர் எதிர்கட்சியில் இணைந்துள்ளதால் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் அவர்கள் கூறினர்.