எஸ்.பி.எம். 2017 முடிவுகள்: மாணவர்களின் அடைவுநிலை சிறப்பாக உள்ளது! மலேசிய கல்வியமைச்சு

0
14
புத்ராஜெயா, மார்ச் 15-
நாடு முழுவதும் எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அத்தேர்வின் தேசிய சராசரி குறியீடு 2016ஆம் ஆண்டின் பதிவுச் செய்யப்பட்ட 5.05ஐ காட்டிலும் 4.90ஆகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது என கல்வி தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அமிம் செனின் தெரிவித்தார்.
2017 எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது என அமிம் செனின் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இத்தகவலை வெளியிட்டார். 2017ஆம் ஆண்டின் எஸ்பிஎம் தேர்வு முடிவின்படி 73 பாடங்களில் 43 பாடங்களின் அடைவுநிலை உயர்ந்திருக்கும் வேளையில், 23 பாடங்கள் சரிந்திருப்பதோடு இன்னும் இரு பாடங்களின் அடைவுநிலையில் எந்த மாற்றமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
எஸ்பிஎம் தேர்வின் முக்கியப் பாடங்களான மலாய், ஆங்கிலம், இஸ்லாமியக் கல்வி, வரலாறு, கணிதம் ஆகியவற்றின் அடைவுநிலை உயர்ந்திருக்கும் வேளையில், நன்னெறிக் கல்வியின் அடைவுநிலை சரிந்துள்ளது. மலாய் மொழி பாடத்தின் அடைவுநிலை 0.46 விழுக்காடு அதிகரித்திருக்கும் வேளையில், நன்னெறி பாடத்தில் 0.11 விழுக்காடு சரிவு கண்டுள்ளதாக அவர் கூறினார்.
இதே போல் தேர்வு செய்யப்பட்ட பாடங்களைப் பொறுத்தவரை இயற்பியல், இரசாயனம், கூடுதல் அறிவியல் ஆகியவற்றில் 0.36 விழுக்காடு வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருக்கும் வேளையில், உயிரியல் பாடத்தில் 0.12 விழுக்காடு சரிவு கண்டுள்ளது என அமிம் செனின் தெரிவித்தார். கடந்தாண்டின் எஸ்பிஎம் தேர்வை 443,883 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.