துங்கு இஸ்மாயில் பதவி துறப்பை ஏற்க மாட்டோம் – டத்தோ ஹமிடின்!

0
14

கோலாலம்பூர், மார்ச். 16 –

மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகும் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்மின் முடிவை ஏற்க மாட்டோம் என அதன் தலைமைச் செயலாளர் டத்தோ ஹமிடின் முஹமட் அமின் தெரிவித்துள்ளார். பதவி விலகல் தொடர்பில் துங்கு இஸ்மாயில், பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஹமிடின் கூறினார்.

எனினும் பதவி விலகுவதில் துங்கு இஸ்மாயில் சரியான நடைமுறையைப் பின்பற்றவில்லை என அவர் தெரிவித்தார். மலேசிய கால்பந்து சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்களிடம் அவர் முறையாக அறிவிக்க வேண்டும். அதேவேளையில் அவரின் பதவி விலகலை மலேசிய கால்பந்து சங்கத்தின் ஆட்சிக் குழு மன்றம் ஒருபோதும் ஏற்காது என்றும் அவர் சொன்னார்.

பீபா எனப்படும் உலக கால்பந்து சம்மேளனத்தின் தரவரிசையில் தேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் மலாயா , 175 ஆவது இடத்தில் இருந்து 178 ஆவது இடத்துக்கு இறக்கம் கண்டுள்ளது. இதனால் இணையத்தளங்கில் சில கால்பந்து ரசிகர்கள், தேசிய அணியின் வீழ்ச்சிக்கு துங்கு இஸ்மாயில்தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளனர். இதில் அதிருப்தி அடைந்துள்ள துங்கு இஸ்மாயில் பதவி விலகுவதற்கு முடிவெடுத்திருக்கலாம் என ஹமிடின் கூறினார்.

கடந்த ஆண்டில் மார்ச் 25 ஆம் தேதி மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் பதவியை ஏற்றது முதல் துங்கு இஸ்மாயில் நாட்டின் கால்பந்து விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக மலேசிய சூப்பர் லீக் கால்பந்துப் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான மானியத்தை 10 லட்சம் ரிங்கிட் முதல் 30 லட்சம் ரிங்கிட் வரை உயர்த்தியுள்ளார்.

துங்கு இஸ்மாயிலின் பதவி விலகல் குறித்து உலக கால்பந்து சம்மேளனம், ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தம்மை தொடர்பு கொண்டுள்ளதாக ஹமிடின் கூறினார்.எனினும் துங்கு இஸ்மாயில் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தாம் உறுதியாக தெரிவித்துள்ளதாக ஹமிடின் தெரிவித்தார்.