புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தி எக்கோனோமிஸ்ட் சஞ்சிகையை சாடினார் பிரிட்டனுக்கான மலேசிய ஆணையர்!
முதன்மைச் செய்திகள்

தி எக்கோனோமிஸ்ட் சஞ்சிகையை சாடினார் பிரிட்டனுக்கான மலேசிய ஆணையர்!

கோலாலம்பூர், மார்ச்.16 – 

மலேசிய அரசாங்கத்தையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கையும் சிறுமைப்படுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்டிருந்த பிரிட்டனின் தி எக்கோனோமிஸ்ட் சஞ்சிகையை பிரிட்டனுக்கான மலேசிய ஆணையர் டத்தோ அஹ்மாட் ரசிடி ஹசிசி கடுமையாக சாடியுள்ளார்.

மலேசிய அரசாங்கம் குறித்து தவறான தகவல்கள் அந்த சஞ்சிகையில் வெளியாகி இருப்பதாக டத்தோ அஹ்மாட் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 10 ஆம் தேதி வெளியான சஞ்சிகையில் ”  திருட்டை நிறுத்து – மலேசிய தேர்தலை பிரதமர் அபகரிக்கவிருக்கிறார் ” என்ற தலைப்பில்  வெளிவந்துள்ள கட்டுரை காலனித்துவ சிந்தனையின் வெளிபாடு என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் உள்ள அமலாக்க தரப்புகள், நீதி பரிபாலனத் துறை, தேர்தல் ஆணையம், ஊடகங்கள், வாக்காளர்களின்  ஆற்றலை குறைத்து மதிப்பிடும் வகையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் குறிப்பிட்ட ஓர் அமைப்பில் இருந்து பணத்தை எடுத்ததாகவோ அல்லது அவரின் அபிமானிகளிடம் இருந்து பணத்தைப் பெற்றதாகவோ டி.ஓ.ஜே எனப்படும் அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியதில்லை.

அந்த பணம் சவூதி அரேபிய அரச குடும்பத்தில் இருந்த பெறப்பட்ட நன்கொடை என்றும் அதில் பெரும்பகுதி திருப்பி அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சரும் இதனை உறுதிச் செய்துள்ளார். எந்த ஓர் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் தேர்தல் எல்லை சீரமைப்பு குறித்து சர்ச்சையை எழுப்பியுள்ள தி எக்கோனோமிஸ்ட் சஞ்சிகை மேற்கத்திய நாடுகளின் இரட்டைப் போக்கை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அவர் சொன்னார். உலகில் ஜனநாயகத்தை அமல்படுத்தும் அனைத்து நாடுகளிலும் தேர்தல் தொகுதிகளின் எல்லை சீரமைக்கப்படுகின்றன. பிரிட்டனும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக தனது தொகுதிகளின் எல்லைகளை சீரமைக்கவிருக்கிறது.

மலேசியாவில் தேர்தல் தொகுதிகளின் எல்லை சீரமைப்பு பணிகளை தேர்தல் ஆணையம், வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் மேற்கொள்ளும் வகையில் நாட்டின் நீதி பரிபாலனத் துறை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ நஜிப் பிரதமராக பொறுப்பேற்றது முதல் நாட்டின் வருமானம் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. 23 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் ஏழ்மை குறியீடும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக அசுர வளர்ச்சிக் கண்டு வருவதை உலக வங்கியும் ஒப்பு கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உலக வங்கி 5.8 விழுக்காடு கணித்தது என்பதையும் அவர் சுட்டி காட்டினார்.

இதுதான் மலேசியா குறித்து உண்மை தகவலாகும்.  வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல்க் சுயநலத்துக்காக எதிர்கட்சிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் வழங்கும் போலியான தகவல்களை அடிப்படையாக கொண்டு தி எக்கோனோமிஸ்ட் சஞ்சிகை தனது கட்டுரையை வெளியிட்டுள்ளது என டத்தோ அஹ்மாட் ரசிடி தெரிவித்துள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன