ஈஜோக், மார்ச் 16-

வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் ஈஜோக் சட்டமன்ற தொகுதியில் யாரை வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் ம.இ.கா.வினர் தலையை பிசைந்து வரும் இவ்வேளையில் அத்தொகுதியில் வேட்பாளராக தேசிய முன்னணியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐ.பி.எப். கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தனை முன்னிறுத்தும்படி அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈஜோக் தொகுதியில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளராக டத்தோ சம்பந்தன் விளங்குவதாகவும் அவருக்கு ஐ.பி.எப். கோலசிலாங்கூர் தொகுதி முழுமையான ஆதரவு அளிப்பதாக அத்தொகுதியின் ஐ.பி.எப்.தலைவர் நாரதராஜூ அம்னோ கோலசிலாங்கூர் தொகுதி தலைவர் டத்தோ ஹாஜி இஷாக் பின் ஹாஜி ஹருணுக்கு இம்மாதம் 13ஆம் தேதி வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோலசிலாங்கூர் ஐ.பி.எப். தொகுதியினரின் எண்ணத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் கொண்டு சேர்க்கும்படியும் அத்தொகுதியில் தேசிய முன்னணியின் வெற்றிக்காக ஐ.பி.எப். கடுமையாக உழைக்கும் என்றும் அக்கடிதத்தில் நாரதராஜூ வலியுறுத்தியுள்ளார்.

தற்போது, ஈஜோக் தொகுதியில் கே.ஆர்.பார்த்திபனை ம.இ.கா. சார்பில் நிறுத்துவதற்கு பயங்கர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் அங்கு போட்டியிடுவதற்கு ம.இ.கா.தேசிய இளைஞர் பிரிவின் தகவல் பிரிவு தலைவர் புனிதன், வழக்கறிஞர் முருகவேல் ஆகியோரின் பெயர்கள் கூறப்பட்டு வருகின்றன.