சுங்கை சிப்புட், மார்ச் 17-

14வது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடத்தப்படலாம் என்கின்ற நிலையில், மஇகா இப்பொழுதுதான் சில முக்கியத் தொகுதிகளில் ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து வருகிறது. மிகத் தாமதமாகத் தான் கட்சித் தலைமை தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து வருகிறது என்று பலர் குறைபட்டுக் கொண்டிருக்கையில், சில ஒருங்கிணைப்பாளர்களின் நியமனம் மிகுந்த எதிர்ப்பை எதிர்நோக்கியிருக்கிறது.

நேற்று சுங்கை சிப்புட் எம்.எச் தங்கும் விடுதியில் டத்தோ சோதிநாதனுக்கு எதிர்ப்பாக நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைகிறது.

கடந்த வாரம் கட்சித் தலைமைத்துவம் சுங்கை சிப்புட் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராகத் தம்மை நியமித்தாக டத்தோ சோதிநாதன் கூறினார். அன்று தொடங்கி இதற்குத் தொகுதி காங்கிரஸ் உட்பட பலர் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சுங்கை சிப்புட் அரசுசாரா இயக்கங்கள் நேற்று ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு அமைகிறது.

சுங்கை சிப்புட் ஐ.ஆர்.சி தலைவர் திரு கிருஷ்ணன் பேசுகையில், டத்தோ சோதிநாதனின் இந்த நியமனத்தைத் தாம் முழுமையாக எதிர்ப்பதாகக் கூறினார். சுங்கை சிப்புட்டைப் பொருத்த வரையில், இங்குள்ள ஒருவரை வேட்பாளராகத் தெரிவு செய்தால் மட்டுமே வெற்றியடைய முடியும். எங்களிடம் 800 குடும்பங்கள் இருக்கிறது. இவர்கள் அனைவரின் வாக்குகள் வேண்டுமென்றால், சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த ஒருவரையே மஇகா தலைமைத்துவம் வேட்பாளராக அறிவிக்கை வேண்டும் என்றார். இது 2 ‘துன்’களைப் பார்த்த இடம். இங்கு சோதியைப் போன்ற ஒருவரை எங்களால் நிச்சயம் ஏற்க முடியாது என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய 80ஆம் ஆண்டு நண்பர்கள் கூட்டுறவு இயக்கத்தின் தலைவர் திரு. உதயா அவர்கள், சோதிநாதன் என்றால் யார் என்றே தங்களுக்குத் தெரியாது என்றார். இங்குள்ள மக்கள் யாரென்றே அறியாத ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால், தோல்வி நிச்சயம். எங்களிடம் 600 வாக்காளர்கள் இருக்கிறார்கள். எங்களின் முழு ஆதரவும் மஇகாவுக்குதான். ஆனால், சோதிநாதனை நாங்கள் ஏற்க முடியாது. சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்தால், எங்களின் முழு ஆதரவையும் தருவோம் என்றார்.

மேலும் பேசிய அவர், சோதிநாதன் கட்சியையே தனது சுய லாபத்திற்காக நீதிமன்றத்திற்கு இழுத்து அவமானப்படுத்தியவர். இவர் சுங்கை சிப்புட்டில் வந்து என்ன செய்ய போகிறார் என வினவினார். இங்கு ஏற்கனவே தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் நிற்கப்போவதாகப் பேசினார்கள். அதனைத் தொடர்ந்து மஇகா பொருளாளர் டத்தோஸ்ரீ வேள்பாரி அவர்களின் பெயரும் அடிப்பட்டது. அப்படி டத்தோஸ்ரீ வேள்பாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், அவருக்கு எங்களின் முழு ஆதரவு உண்டு.

காரணம், அவரின் தந்தை துன் சாமிவேலு இந்தத் தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அவரின் மகன் என்கின்ற பட்சத்தில், அப்பா விட்டுச் சென்ற பணியை மகன் செவ்வனே ஏற்றுச் செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கூறினார்.