அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கொலை செய்யப்பட்ட தாரணியின் குடும்பத்தினருக்கு சொக்சோ இழப்பீடு!
சமூகம்முதன்மைச் செய்திகள்

கொலை செய்யப்பட்ட தாரணியின் குடும்பத்தினருக்கு சொக்சோ இழப்பீடு!

கோலாலம்பூர், மார்ச் 19-
சக பணியாளரால் குத்தி கொலை செய்யப்பட்ட தாரணி தேவராஜூவின் பெற்றோர்களுக்கு ஆயுட்கால சொக்சோ இழப்பீடு வழங்கப்படுகின்றது.

இன்று பண்டார் பாரு செலாயாங்கில் உள்ள தாரணியின் இல்லத்திற்கு வருகைப் புரிந்த அம்னோ செலாயாங் தொகுதியின் துணைத்தலைவர் பொறியியலாளர் டத்தோ முஹம்மட் நசீர் பின் இப்ராஹிம், கோலாலம்பூர் சொக்சோ அலுவலகத்தின் இயக்குநர் ஹாஜி சாலிஜான் பின் சாய்கோன் ஆகிய இருவரும் தாரணியின் தந்தை தேவராஜூ, தாய் லெட்சுமி ஆகியோரிடம் தாரணியின் இறுதி சடங்கிற்கான தொகையாக 2 ஆயிரம் வெள்ளியையும் முதல் மாத சொக்சோ இழப்பீடான 578.70 வெள்ளியையும் வழங்கினர்.

கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி பிற்பகல் மணி 1.30 அளவில் கோத்தா டாமன்சாராவிலுள்ள ஒரு பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் தாரணியை சக ஊழியரான ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். அந்நபருடனான உறவை தாரணி முறித்துக்கொண்டதோடு வேறொருவரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக அவர் கூறியதால் ஆத்திரமும் பொறாமையும் அடைந்த அந்நபர் தாரணியை காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்தான்.

மேலும், அவனது காரிலிருந்து தாரணியைக் கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கண்டெடுக்கப்பட்டதோடு தாரணியின் உடல் பிரேத பரிசோதணைக்காக மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஹரியான் மெட்ரோ நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் பரிவுமிக்க சொக்சோ அணியைச் (எஸ்.பி.பி) சேர்ந்த தேவன் கருப்பையா, தாரணி வேலை செய்த இடத்தின் முதலாளி மற்றும் தாரணியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டதோடு அது குறித்த விசாரணையை மேற்கொண்டார்.

இந்த விசாரணையின் வாயிலாக தாரணியின் மரணம் சொக்சோவின் முடக்க திட்டத்தின் கீழ் பி.கே.டி. எனப்படும் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது. மேலும், தாரணியின் குடும்பத்தினரின் இழப்பீட்டு கோரிக்கையை பரிசீலணை செய்து ஏற்றுக்கொண்ட எஸ்.பி.பி. தாரணியின் இறுதி சடங்கிற்கான 2 ஆயிரம் வெள்ளிக்கான காசோலையையும் தாரணியின் பெற்றோருக்கு சொக்சோ ஆயுட்கால மாதாந்திர இழப்பீட்டையும் வழங்குவதற்கு முன்வந்தது. இந்த மாதாந்திர இழப்பீட்டின் முதல் மாதத்திற்கான தொகை இன்று வழங்கப்பட்டதாக தேவன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன