கேமரன்மலை, மார்ச் 19-
வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு அரசு பல வழிகளில் உதவி புரிந்து வருகின்றது. வரும் காலங்களில் உதவி பெரும் மக்களின் எண்ணிக்கையை குறைத்து, வருமானத்தை பெருக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டியதுதான் தமது நடவடிக்கையாக இருக்குமென கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியின் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளரான டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்தார்.

மக்களின் சுமைகளை குறைக்க வேண்மென அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் மூலம் மக்களின் சுமை அடியோடு குறைந்து விட்டது என கூறிவிட முடியாது. ஆனால் அது மக்களின் சுமையை குறைத்துள்ளது என்பதை உணர முடிகின்றது.

ஆனால், இனி வரும் காலங்களில் சமூக நல உதவிகளுக்காக காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையை குறைத்து, வருமானத்தை ஈட்டும் சமூகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாக இருப்பதாக பெரிஞ்சாங் சந்தையில் கேமரன்மலையைச் சேர்ந்த 357 குடும்பங்களுக்கு மைகாசே சமூக உதவியை வழங்கிய நிகழ்ச்சியில் பேசிய ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவு தலைவருமான அவர் கூறினார்.

மை காசே மூலம் இங்குள்ள 357 குடும்பங்களுக்கு 80 வெள்ளிக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை என்.ஆர்.சி. எனப்படும் நஜீப் ரசாக் கிளப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மை காசே உதவியை 1 ஆண்டிற்கு இந்த 357 குடும்பங்களும் இந்த உதவியை பெறுகிறார்கள். தொடர்ச்சியான உதவிகளை அரசாங்கம் வழங்குவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.