பெர்த், மார்ச் 19-
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெகானிக்கல் இன்ஜினியர் ஒருவர் தான் 2014ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் எம்எல்370ன் பாகங்களை கூகுள் எர்த் மூலம் கண்டறிந்துள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு, எம்.எச் 370 விமானம், கோலாலம்பூரில் இருந்து, பெய்ஜிங் நோக்கி 293 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த போது மாயமானது.

1,046 நாட்களுக்கு பின்பு, மலேசியா மற்றும் சீனாவுடன் இணைந்து நடந்த தேடுதல் முயற்சி முற்றிலுமாக கைவிடப்பட்டது. உலகளவில் நூற்றுக்கணக்கானோர் சிறப்பாக தேடுதல் முயற்சி செய்தும், விமானத்தை கண்டறிய முடியவில்லை. விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே இந்த தேடுதல் பணிதான் மிகவும் பெரிய பரப்பளவிலும், ஆழ்கடலிலும் நடைபெற்றது.

இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மாயமான விமானம் குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பீட்டர் மோகன் என்ற மெகானிக்கல் என்ஜினியர் திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார். காணாமல் போன விமானங்களை தேடும் துறையில் ஆர்வமுள்ள பீட்டர், கூகுள் எர்த் மூலம் 2014ம் ஆண்டு மாயமான எம்எச்370ஐ கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார்.

இவரின் ஆய்வு முடிவுகள்படி விமானம் மொரிஷியஷில் இருந்து 22.5 கிமீட்டர் தொலைவில் 16 கி.மீ தெற்கில் உள்ள ரவுண்ட் தீவை காட்டுகிறது. இந்தத் தீவில் இதுவரை விமானம் மாயமானது குறித்து தேடுதல் நடத்தப்பட வில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் சரியான தேடுதல் வேட்டையை நடத்தாததோடு இந்தப் பகுதியில் தேடுதல் நடத்தவும் மறுத்ததாக பீட்டர் கூறுகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 4 விசாரணை அதிகாரிகள் ஆஸ்திரேலியாவிற்கு எம்எச் 370 விமானத்தை தேடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர், ஆனால் இந்த அதிகாரிகள் பல முக்கிய தகவல்களை கூறாமல் மறைத்துவிட்டதாக பீட்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

டெய்லி ஸ்டார் பத்திரிக்கைக்கு பீட்டர் அளித்துள்ள பேட்டியில் அமெரிக்க அதிகாரிகள் திரட்டிய தகவல்களை அனைத்தையும் மக்கள் மற்றும் எங்களது அரசாங்கத்திடம் இருந்து மறைத்துவிட்டனர், அது ஏன் என தெரியவில்லை”. மாயமான விமானம் முற்றிலும் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது, ஒருவேளை இந்த உண்மையைச் சொன்னால் வேறு விசாரணை தொடங்குமோ என்று அவர்கள் கூறாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தான் சேகரித்த தகவல்களை பீட்டர் ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இவரின் கூற்றுபடி விமானம் புறப்பட்ட 6 மணி நேரத்திற்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆயினும், அவரது இந்த தகவலை ஆஸ்திரேலிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கூகுள் எர்த் மூலம் அவர் கண்டதாக கூறப்படும் விமானம் மலேசிய ஏர்லைன்ஸின் எம்.எச். 370 விமானம் அல்ல என்றும் அந்த விமானம் எம்.எச் 370 விமானத்திற்கு முன்பு 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மற்றொரு விமானத்தினுடையது என அவர் கூறினார். இந்த படம் 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி படம் பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.