புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை மார்ச் 28-ல் தாக்கல் செய்யப்படும் !
முதன்மைச் செய்திகள்

தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை மார்ச் 28-ல் தாக்கல் செய்யப்படும் !

கோலாலம்பூர், மார்ச்.22 – 

தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை வரும் மார்ச் 28 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மக்களவைத் தலைவர் டான் ஸ்ரீ பண்டிக்கார் அமின் மூலியா அறிவித்துள்ளார்.

தேர்தல் தொகுதிகளின் எல்லை சீரமைப்பு தொடர்பில் தேர்தல் ஆணையம் முன் வைத்துள்ள பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய ஆவணங்கள் வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்பிக்கப்பட்டது. எனினும் இந்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியில் எடுத்து செல்வதற்கோ அல்லது அதனைப் பகிரங்கப்படுத்துவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பண்டிக்கார் கூறினார்.

மார்ச் 28 ஆம் தேதி அந்த இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்களில் உள்ள விசயங்களைப்  பொதுவில் கூற முடியாது. அந்த ஆவணங்கள் வெளியே கொண்டு செல்லும் பட்சத்தில் அதில் உள்ள தகவல்கள் தவறாக சித்தரிக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.

தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பின் இறுதி அறிக்கை தொடர்பில் தேசிய முன்னணி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நடப்பில் உள்ள 220 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 111  உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே இந்த தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பு மீதான இறுதி அறிக்கை மக்களவையில் ஏற்று கொள்ளப்படும் என்பது குறிப்பிடதக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன