புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > அம்னோவில் இருந்தபோது இனவாத அரசியல் புரிந்ததற்காக வருந்துகிறேன்! முக்ரிஸ் மகாதீர்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

அம்னோவில் இருந்தபோது இனவாத அரசியல் புரிந்ததற்காக வருந்துகிறேன்! முக்ரிஸ் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22-
அம்னோவில் இருந்த போது ஜ.செ.க. கட்சியைக் குறி வைத்து அதுவொரு இனவாத கட்சி என கூறி தாம் இனவாத அரசியலை மேற்கொண்டதற்கு இப்போது வருத்தம் தெரிவிப்பதாக பெர்சாத்து கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்தார்.

100 விழுக்காடு மலாய்காரர்கள் வருகைப் புரிந்த நிகழ்ச்சிகளில் ஜ.செ.க. கட்சியை விமர்சிக்கும் வகையில் மலாய்காரர்கள் தங்களது உரிமைகளை இழப்பார்கள் என நான் கூறியிருக்கிறேன். நான் தவறு செய்துள்ளை இப்போது உணர்கிறேன். வருத்தம் அடைகின்றேன். அம்னோவில் இருந்த போது ஜ.செ.க. கட்சியை ‘‘போகேமேன் (பேய்மனிதனாக) கருதியதாக முக்ரிஸ் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜ.செ.க., அமானா, பி.கே.ஆர். ஆகிய கட்சிகள் உள்ள நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்து கட்சி இணைந்த போதுதான் லிம் கிட் சியாங் தலைமைத்துவத்திலான ஜ.செ.க. கட்சியைப் பற்றி அம்னோ பரப்பிய குற்றச்சாட்டு உண்மையில்லை என்பதை உணர்ந்தேன். இந்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மக்களுடன் உள்ளதை இப்போதுதான் நாங்கள் புரிந்துக்கொண்டோம். பினாங்கை ஜ.செ.க. வழிநடத்தும் முறை அதிக நன்மைகளைத் தருவதைப் பார்க்கின்றேன். மலாய்க்காரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதால் இவ்விவகாரம் மீண்டும் எழாது என முன்னாள் கெடா மந்திரி புசாருமான முக்ரிஸ் மகாதீர் கூறினார்.

பெரிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாவிட்டால் அம்னோ இனவாத அரசியலைக் கையாளும். அதாவது, ஆட்சி மாறினால் லிம் கிட் சியாங் பிரதமராவார் என மக்களை மிரட்டும் என அவர் சொன்னார். மேலும், அம்னோவின் இந்த குற்றச்சாட்டு குறித்து கேள்வியெழுப்பிய முக்ரிஸ் மகாதீர், நம்பிக்கைக் கூட்டணி துன் டாக்டர் மகாதீரை பிரதமர் வேட்பாளராகவும் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸாவைத் துணைப்பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்துள்ளதைக் குறிப்பிட்டார்.

பெர்சாத்து கட்சி இன அடிப்படையில் அமைக்கப்பட்டாலும் அக்கட்சி அம்னோவைப் போன்று இனவாத கொள்கையைப் பயன்படுத்தாது. இதர இனங்களுடனான உறவை பாதிக்கும் வரையில் அம்னோ இனவாத கொள்கையைப் பயன்படுத்துவது தெளிவாக தெரிகின்றது. இதனை நாம் தவிர்க்க வேண்டும். மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமை, கூட்டரசு சமயமாக இஸ்லாமிய சமயம், தேசிய மொழியாக மலாய் மொழி முதலானவற்றை நாங்கள் தற்காப்போம் என முக்ரிஸ் மகாதீர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன