திருச்சி:

நடிகர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த மாதம் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி கொடியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சுற்றுப்பயணங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

மதுரை மாநாட்டில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம் ஏப்ரல் மாதம் திருச்சியில் நடைபெறும் என அறிவித்தார். அதன்படி வருகிற ஏப்ரல் 4-ந் தேதி திருச்சி பொன்மலை ஜி-கார்னரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இதற்காக திருச்சியில் முக்கிய இடங்களில் பிரம்மாண்ட சுவர் விளம்பரங்களை எழுதும் பணிகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய இடங்களில் சுவர்களை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சுவர் விளம்பரங்கள் அதிக அளவில் எழுதப்படுவதால் திருச்சியில் ஓவியர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. வெளியூர்களில் இருந்தும் ஓவியர்கள் வரவழைக்கப்பட்டு சுவர் விளம்பரங்களை எழுதி வருகிறார்கள்.

திருச்சியில் தி.மு.க.வினரின் ஈரோடு மாநாடு விளம்பரம் மற்றும் அ.தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணியினர் ஏற்கனவே சுவர்களில் தங்கள் கட்சி விளம்பரங்களை எழுதி வருவதால் கமல் கட்சி நிர்வாகிகள் சுவர்களை பிடிப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து மாநில செயலாளர் தங்கவேல் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் திருச்சி வந்து ஆலோசனை நடத்தி சென்றுள்ளனர். கமல் ஏப்ரல் 3-ந் தேதி மாலை திருச்சி வர வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருச்சி ஜி-கார்னரில் ஏற்கனவே அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, த.மா.கா. கட்சிகள் கூட்டம் நடத்தியுள்ளன. இந்த கட்சிகள் கூட்டத்தை விட பிரம்மாண்ட அளவில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளில் கமலின் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.