கப்பாளா பத்தாஸ், மார்ச்.25 –
கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்துக்கு என்றும் தாம் துணை நிற்கவிருப்பதாக அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரீசால் மெரிக்கான் தெரிவித்துள்ளார்.

கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியர்கள் சிறுபான்மை இனமாக இருந்தாலும் அவர்களின் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும் என்ற சிந்தனை தமக்கு எப்போதும் உள்ளதாக வெளியுறவு துணை அமைச்சருமான அவர் சொன்னார். கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதியின் ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றும்போது ரீசால் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பாக கல்வித்துறையின் மூலம் கப்பாளா பத்தாசில் உள்ள இந்திய சமூகம் முன்னேற்றம் அடைவதை தாம் காண விரும்புவதாக ரீசால் கூறினார்.

தந்தை லாரி ஓட்டுநராக இருந்தால் அவரின் பிள்ளை ஒரு மருத்துவராக வர வேண்டும். கடந்த தலைமுறையைக் காட்டிலும் அடுத்த தலைமுறை கல்வியில் மேம்பட வேண்டும்.இந்த தொகுதியில் பழனியாண்டி, மாலாக்கோப் தோட்டம் என இரண்டு தமிழ்ப்பள்ளிகள் இருந்தாலும், அந்த இரண்டு தமிழ்ப்பள்ளிகளும் தரமான பள்ளிகளாகவும் சிறந்த நிலையில் இருப்பதையும் தாம் உறுதிச் செய்ய விருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்தியர்களின் நலனில் கப்பாளா பத்தாஸ் தேசிய முன்னணி எப்போதும் அக்கறைக் கொண்டுள்ளது. அதேவேளையில் கப்பாளா பத்தாசில் இந்தியர்கள் சிறுபான்மை இனமாக இருந்தாலும் ஒற்றுமை மிக அவசியம் என்றும் ரீசால் வலியுறுத்தினார். ஒற்றுமையின் மூலம் இந்திய சமூகம் தொடர்ந்து வளர்ச்சி பெற முடியும் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதித் தலைவர் மு.வேலாயுதம், தகவல்துறையின் கீழ் இயங்கும் 1 மலேசிய சமூகத் திட்டத்தின் கம்போங் கோவில் தலைவராக நியமிக்கப்படுவதாக ரீசால் அறிவித்தார். அங்குள்ள இந்தியர்களின் மிகப் பெரிய ஆதரவைப் பெற்றுள்ளதுடன் கப்பாளா பத்தாஸ் தேசிய முன்னணிக்கு பக்க பலமாக இருக்கும் மைபிபிபி கட்சியின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த பொறுப்புக்கு அவருக்கு வழங்கப்படுவதாக ரீசால் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கூட்டரசு பிரதேச துணை அமைச்சரும் மைபிபிபி கட்சியின் உதவித் தலைவருமான டத்தோ லோக பால மோகனும் கலந்து கொண்டார்.

பினாங்கு மாநிலத்தை மீண்டும் தேசிய முன்னணி ஆள்வதற்கு மைபிபிபி கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என லோக பால மோகன் கேட்டு கொண்டார். 14 ஆவது பொதுத் தேர்தல் மிக கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தேசிய முன்னணி மீண்டும் மத்தியில் ஆளும் அரசாங்கமாக தேர்வுப் பெறும் என லோக பால மோகன் நம்பிக்கைத் தெரிவித்தார். அதேவேளையில் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சியிடம் சிக்கியுள்ள பினாங்கு மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கப்பாளா பத்தாஸ் மைபிபிபி கட்சியின் தேர்தல் கேந்திரமும் முடுக்கி விடப்பட்டது.