சுபாங்ஜெயா, மார்ச் 26-
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டத்தின் ஒரு பகுதியான தொழில்நுட்ப திறன்கள் முன்முயற்சி மற்றும் தொழில் (இக்திசாஸ்) திட்டத்தை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சன்வே பிரமிட் மாநாட்டு மையத்தில் தொடக்கி வைத்தார்.

இத்திட்டத்திற்காக மாநில அரசு வெ.52 மில்லியனை ஒதுக்கியுள்ளது.இதில் 51 விழுகாடு ஒதுக்கீடு உயர்கல்வி ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. அது வெ.101.73 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் மூலம் மாநில அரசாங்கம் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை கல்வியிலும் அது சார்ந்த துறையிலும் தீவிர கவனம் செலுத்துவதை அனைவராலும் உணர முடிவதை சுட்டிக்காண்பித்த மந்திரி பெசார் நடப்பு சந்தைக்கு ஏற்ப சிந்தித்து அதுசார்ந்த வாய்ப்புகளை உருவாக்குவதே மாநில அரசின் இலக்கு என்றும் அவர் மேலும் கூறினார்.

இத்திட்டத்தினால் இன்றைய தொழில் நுட்ப சவால்களை எதிர்க்கொள்ளும் ஆளுமையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் சிறந்த எதிர்காலத்தின் உத்தரவாதத்தையும் மாநில அரசு தீவிர கவனம் கொண்டிருப்பதாகவும் கூறினார்.ஆசியன் ரீதியில் பெரும் போட்டியினை கொடுப்பதோடு உலகளாவிய ரீதியில் கடும் போட்டி தன்மையையும் கொடுக்கும் விவேகத்தை உருவாக்குதலும் அதில் அடங்கும் என்றார்.

மேலும், சிலாங்கூர் மாநிலம் இத்திட்டத்தின் கீழ் 4.0 தொழில்துறை புரட்சியை உருவாக்கும் வல்லமைக்கு தயாராகி வருவதாகவும் கூறிய மந்திரி பெசார் இவ்வாண்டு தொடக்கம் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை புரட்சிக்கு சிலாங்கூர் மாநிலத்தின் இக்திசாஷ் முக்கிய கருவூலமாக உயிர்பெற்று வருவதாகவும் கூறினார்.

இத்திட்டத்தின் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் 2000 இளம் தலைமுறையினரை இத்துறை சார்ந்து பல்வேறு தொழில்துறையில் ஆளுமை மிக்கவர்களாய் உருவாக்குவதை இலக்காக கொண்டு செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.அதற்கு துணையாக இன்பென்ஸ்,சிலாங்கூர் மாநில மனிதவள மேம்பாட்டு மையம் (எஸ்.எச்.ஆர்.டி.சி), எஸ்.எஸ்.தி & கன்சல்தன்சி அகாடமி ஆகியவையோடு கைகோர்த்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் 50 விழுக்காடு தொழில்நுட்பம் மற்றும் தொழித்துறை சார்பினை உயர்த்துவதற்கு இலக்கு கொண்டிருப்பதோடு சிலாங்கூர் மாநிலத்தை தொடர்ந்து தொழில்துறையில் அதிக வருமானம் கொண்ட மாநிலமாய் நிலை செய்வதே இலக்கு என்றும் மந்திரி பெசார் கூறினார்.

இத்துறையில் திறன் மிக்கவர்களை உருவாக்குவதும் அவர்களின் எதிர்காலத்தை வளமிக்கதாகவும் உத்தரவாதம் செய்வதோடு ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளை போல் தொழில்துறை புரட்சி செய்வதே சிலாங்கூர் மாநிலத்தின் தனித்துவ இலக்கு என்றும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நினைவுறுத்தினார்.
(நன்றி, சிலாங்கூர்கினி)