முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஜோசபினின் 24 ஆண்டு சாதனையை முறியடித்த மகள் ஷேரன்
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஜோசபினின் 24 ஆண்டு சாதனையை முறியடித்த மகள் ஷேரன்

ஈப்போ, மார்ச் 26-
மலேசியாவின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனையான ஜோசபினின் 24 ஆண்டு காலமாக கட்டிக் காத்த 400 மீட்டர் ஓட்டப்பந்தயச் சாதனையை அவரது மகள் ஷேரன் சாம்சன் (வயது 19) இன்று முறியடித்தார்.

பேரா லுமூட் ஆல்கம்மெஸ் தடகளப் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக 1994ஆம் ஆண்டு ஜோசபின் மேரி 400 மீட்டர் ஓட்டத்தில் 55.11 வினாடியை பதிவு செய்திருந்தார். ஆனால் ஷேரன் நேவி உள்ளரங்கில் நடந்த போட்டியில் 400 மீட்டர் தூரத்தை 54. 79 விநாடியில் கடந்து புதிய சாதனையை ஏற்படுத்தினார்.

இப்போட்டியில் கூட்டரசு பிரதேசத்தை சேர்ந்த அதிஃபா சைனுடின் 57.29 வினாடிகளில் தூர இலக்கை கடந்து வெள்ளி பதக்கத்தை வென்ற வேளையில் கெடாவைச் சேர்ந்த நோர்ஷாதுல் நடியா 61.18 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இறுதியாக என் அம்மாவின் சாதனையை முறியடித்துவிட்டேன். குடும்பத்தினர் பெருமைப்படும் தருணமாக இது அமைந்தது என்றார் ஷேரன். ஷேரனின் தந்தை சான்சனும் மலேசியாவின் முன்னாள் தேசிய ஓட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.  என் அம்மா சாதனையை பதிவு செய்யும் போது, நான் பிறக்கவே இல்லை. இப்போது அவரது சாதனையை நானே முறியடித்து, குடும்ப சாதனையாக அதை இன்னமும் நாங்களே வைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த போட்டியின் ஷேரன் வெல்லும் இரண்டாவது தங்கப்பதக்கமாக இது திகழ்கிறது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 200 மீட்டர் ஓட்டத்திலும் அவர் தங்கப்பதக்கத்தை வென்றார். 2015ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த சீ விளையாட்டுப் போட்டியில் ஷேரன் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்தார்.

அம்மாவிற்கு இதை விட ஒரு மகிழ்ச்சியான தருணம் இருக்கவே முடியாது. இந்த வெற்றி சாதனை மென்மேலும் தொடர வேண்டும். அதே போல் செம்படம்பர் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசிய போட்டியிலும் ஷேரன் சாதிக்க வேண்டுமென தாம் விரும்புவதாகவும் அவரது தாயார்ஜோசபின் கண்ணீர் மல்க கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன