கோலாலம்பூர், மார்ச்.28 –

வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பேரா , தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில்  இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை எதிர்த்து பெர்சத்து கட்சியின் கொள்கை மற்றும் வியூகப் பிரிவின் தலைவர் டத்தோ ராய்ஸ் ஹுசேன் போட்டியிடக்கூடும் என கூறப்படுகிறது.

இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி பெர்சத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தாப்பா தொகுதியில் தாம் போட்டியிடுவதை ராய்ஸ் உறுதியாக தெரிவிக்கவில்லை. எனினும் கட்சியின் தலைமைத்துவம் கேட்டு கொண்டால் நிச்சயம் போட்டியிடத் தயாராக இருப்பதாக ராய்ஸ் தெரிவித்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு தொடங்கி ம.இ.கா. தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வருகின்றனர். டத்தோ எம்.ஜி பண்டிதன் , டான்ஸ்ரீ கே. குமரன், டான்ஸ்ரீ  வீரசிங்கம் இந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளனர். 2008 ஆம் ஆண்டில் தாப்பா தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட டத்தோஸ்ரீ  சரவணன் 2013 ஆம் ஆண்டில் அந்த தொகுதியைத் தற்காத்து கொண்டார்.

அந்தத்  தேர்தலில் சரவணன் 7,927 வாக்குகள் வித்தியாசத்தில் பிகேஆர் கட்சியின் வசந்தகுமாரைத் தோற்கடித்தார். மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தாப்பாவில் 2013 கணக்கெடுப்பின்படி 46 விழுக்காட்டினர் மலாய்க்கார வாக்காளர்களாவர். 28 விழுக்காடு சீன வாக்காளர்களையும், 13 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும், 13 விழுக்காடு மற்ற வாக்காளர்களையும் தாப்பா கொண்டுள்ளது.