வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > வங்சா மாஜூ தொகுதியில் டத்தோஸ்ரீ டாக்டர் ஷாஃபெய் அப்துல்லாவிற்கே எங்களின் ஆதரவு!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

வங்சா மாஜூ தொகுதியில் டத்தோஸ்ரீ டாக்டர் ஷாஃபெய் அப்துல்லாவிற்கே எங்களின் ஆதரவு!

வங்சா மாஜூ, மார்ச் 29-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் வங்சா மாஜூ நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் வேட்பாளராக டத்தோஸ்ரீ டாக்டர் ஷாஃபெய் அப்துல்லாவே மீண்டும் நிறுத்தப்பட வேண்டுமென அத்தொகுதியைச் சேர்ந்த அரசு சார்பற்ற இயக்கமான மலேசிய நாடி ராக்யாட் இயக்கம் வலியுறுத்தியது.

இது குறித்து அந்த இயக்கத்தின் ஆலோசகர் டத்தோ அன்புமணி பாலன் கூறுகையில், கடந்த பொதுத்தேர்தலில் அவர் இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டிருந்தாலும் இன்று வரையில் இங்குள்ள மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, வரும் பொதுத்தேர்தலில் அவர்தான் இத்தொகுதியில் தேசிய முன்னணியின் வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு எங்கள் இயக்கத்தின் ஆதரவு முழுமையாக உள்ளது என நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

வங்சா மாஜூ தொகுதியில் ஏறக்குறைய 7,000 இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதி இந்தியர்களின் பிரச்னைகளுக்கு அவர் சிறந்த முறையில் தீர்வு கண்டு வந்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கி நாடி ரக்யாட் இயக்கம் பல்வேறு சமூகநல சேவையில் ஈடுபட்டு வருகின்றது. சமூகநலப் பிரச்னை, கல்வி, மருத்துவம் முதலான சேவைகளில் தீவிரம் காட்டியிருக்கிறது. இதர பிரச்னைகளுக்கு அது தீர்வு கண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

இத்தொகுதியில் 36 பூக்கடை வியாபாரிகளுக்கு அதற்கான அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். எங்களுடைய அனைத்து சேவைகளுக்கும் செயல் திட்டங்களுக்கும் இந்த அமைப்பின் ஆலோசகருமான டத்தோஸ்ரீ ஷாஃபெய் முழு ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளார் என அன்புமணி பாலன் குறிப்பிட்டார்.

நாடி ரக்யாட் இயக்கத்தின் தலைவர் அழகன் கூறுகையில், ஸ்தாப்பாக்கிலுள்ள ஸ்ரீ ஐயனார் ஆலயத்தின் சீரமைப்பு பணிகளுக்கும் மகா கும்பாபிஷேகத்திற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடமிருந்து மிக குறுகிய காலத்தில் ஷாஃபெய் 3 லட்சம் வெள்ளி நிதியைப் பெற்றுத் தந்ததாக கூறினார். அந்த ஆலயத்தின் அருகாமையிலுள்ள நிலத்தை டி.ஓ.எல் அடிப்படையில் பெற்றுத்தருவதற்கும் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னானிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் நில அலுவலகத்திற்கு ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளார் என அழகன் சொன்னார்.

இதனிடையே, வருகின்ற பொதுத்தேர்தலில் இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு முழு ஆதரவு வழங்கும்படியும் இந்த தொகுதியில் தமக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அனைத்து இன மக்களுக்கும் தொடர்ச்சியான சேவையை வழங்குவேன் என டத்தோஸ்ரீ ஷாஃபெய் உறுதியளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன