அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > லிம் சாம்ராஜ்யம் அழிந்து போகும்
முதன்மைச் செய்திகள்

லிம் சாம்ராஜ்யம் அழிந்து போகும்

மலாக்கா. ஜூலை 30-

உட்கட்சி பிரச்னையினாலும் சர்வாதிகாரத் தனத்தினாலும் ஜசெகவை ஆட்டிப் படைக்கும் லிம் சாம்ராஜ்யம் சரியும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.  தன்மூப்பான செயல்களில் ஈடுபட்டுள்ள ஜசெகவின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அவரின் தகப்பனார் லிம் கிட் சியாங் ஆகியோரின் நடவடிக்கைகளை விரும்பாத அதன் உறுப்பினர்களும் முன்னாள் தலைவர்களும் கடும் அதிருப்தி கொண்டிருப்பதால் அந்தக் கட்சியில் சரிவு ஏற்பட்டு வருவதாக ஸாஹிட் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மசீச சீன வாக்காளர்களின் வாக்குகளைக் கவர கடுமையாகப் பாடுபட வேண்டுமென்றும் கடந்த 12ஆவது 13ஆவது பொதுத் தேர்தல்களின் தோல்விகளினால் துவண்டு போகாமல் துடிப்போடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால், மலாக்காவில் மலாய் சாம்ராஜ்யம் அழிந்தது போன்ற நிலைமை வரலாம் என்றும் அவர் எச்சரித்தார்.  ஜசெக வின் 2,576 பேராளர்களில் பாதிப் பேர் லிம் சாம்ராஜ்யத்தை எதிர்ப்பதால், அவர்கள் கட்சித் தேர்தலில் ஓரங்கட்டப்பட்டதாகவும், கட்சியில் 2012 ஆம் ஆண்டு மத்திய செயலவைத் தேர்தல் சட்ட முறையானதென அறிவிக்கப்பட்டதால் தேர்தலை மீண்டும் நடத்த அது அறிவுறுத்தப்பட்டதாகவும் அதனை நடத்த கட்சி சாக்குப் போக்குகளைக் காட்டி வருவதாகவும் ஸாஹிட் குறிப்பிட்டார்.

ஜசெக வின் பொய் வாக்குறுதிகளை சீன சமூகம் நம்பி ஏமாறாமல் நாட்டிற்கு வளப்பத்தைக் கொண்டுவரும் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். கோத்தா மலாக்கா அம்னோ தொகுதி பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றும்போது ஸாஹிட் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன