வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > 1எம்.டி.பி, அரசாங்க நிதிகளை நஜீப் திருடவில்லை! டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

1எம்.டி.பி, அரசாங்க நிதிகளை நஜீப் திருடவில்லை! டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன்

கோலாலம்பூர், மார்ச் 30-

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் 1எம்.டி.பி, அரசாங்க நிதிகளைத் திருடியதாக எதிர்க்கட்சிகள் அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. நஜீப் அத்தகைய நிதிகளைத் திருடவில்லை என மலேசிய இந்திய  வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் (மைக்கி) தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார்.

நாட்டின் பிரதமர்களிலேயே இன பாகுபாடு பார்க்காமல் அனைத்து இன மக்களுக்கும் உதவிகளை வழங்கி வருபவர் டத்தோஸ்ரீ நஜீப். அவரது தலைமைத்துவம் நீடிக்கவும் வரும் பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவருக்கு கிடைக்கவும் மைக்கி களத்தில் இறங்கி ஆதரவு திரட்டவிருப்பதாகவும் அவர் கூறினார்.

நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. ஆனாலும், இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்திற்காக உதவிகளையும் அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வுகளையும் நஜீப் வழங்கி வருகிறார்.

அவரது தலைமைத்துவம் தொடர்வதற்காக மைக்கி நாடு தழுவிய நிலையில் இந்திய வாக்காளர்களை சந்தித்து இந்திய சமூகத்திற்காக அரசாங்கம் ஏற்படுத்தி தந்துள்ள சலுகைகள், இந்திய மேம்பாட்டு வியூக பெருந்திட்டத்தில் உள்ள வாய்ப்புகள் முதலானவற்றை எடுத்து சொல்லி மைக்கி ஆதரவு திரட்டி வருகின்றது.

22 ஆண்டுகள் நாட்டை வழிநடத்தி வந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இந்திய சமூகத்தை புறக்கணித்தார். இப்போது நம்பிக்கை கூட்டணியின் தலைவராக இருக்கும் அவர் அந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தால் 100 நாளில் இந்தியர்களின் குடியுரிமை பிரச்னைக்கு தீர்வுக் காணப்படும் என கூறுகிறார்.

இந்தியர்களின் குடியுரிமை பிரச்னை அவரது காலத்திலும் இருந்தது. அப்போது ஏன் அவர் தீர்வு காணவில்லை. இப்போது மஇகா மீது குறை கூறும் அவர் தான் பதவி வகித்த காலத்தில் ஏன் கூறவில்லை. அவரை நாம் நம்ப முடியாது எனவும் இன்று நடைபெற்ற அந்த சம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற செயலவை கூட்டத்தில் அந்நிய தொழிலாளர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் கொள்கையை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சராக யார் இருந்தாலும் அதில் மாற்றத்தை கொண்டு வராதபடி இருக்கும் வகையில் அரசாங்கம் அதனை அமைப்பதற்கு வலியுறுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

அதோடு, அரசாங்கம் இந்திய சமூகத்திற்காக ஏற்படுத்தித் தந்துள்ள தெக்கூன், அமானா இக்தியார், முதலான கடனுதவி திட்டங்கள் தொடர வேண்டும் என்றும் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி, தேசிய அளவில் செயல்படும் வர்த்தக சங்கங்களான பிரிமாஸ், பிரிஸ்மா போன்ற சங்கங்களுக்கு மைக்கியில் செயற்குழு உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளோம். இதன் வாயிலாக அவர்களது பிரச்னைகள் அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்கப்படும் என டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன