புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > செரெண்டா தமிழ்ப்பள்ளிக்கான வெ.6.43 மில்லியன் நிதி மாயமாகவில்லை!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

செரெண்டா தமிழ்ப்பள்ளிக்கான வெ.6.43 மில்லியன் நிதி மாயமாகவில்லை!

புத்ராஜெயா, மார்ச் 30-

கோலசிலாங்கூர் மிஞ்சாக் தோட்டத்திலிருந்து உலுசிலாங்கூர் தொகுதியிலுள்ள செரெண்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், செரெண்டா தமிழ்ப்பள்ளியாக அழைக்கப்படும் அப்புதிய பாடசாலையை அமைப்பதற்கான அரசாங்கத்தின் வெ.6.43 மில்லியன் நிதியானது கல்வி அமைச்சில் பத்திரமாக இருப்பதாக அவ்வமைச்சின் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் விளக்கமளித்தார்.

அந்த மானியம் மாயமாகிவிட்டதாக ஒருசில விஷமிகள் பொய்யுரைத்து வருவதாகவும் அவர்களின் கீழ்த்தரமான நடவடிக்கையானது, அப்பள்ளியை நிறுவவிடாமல் தடுத்து வருகின்ற ஒரு சுயநலவாத கும்பலுக்கு ஒத்து ஊதுவதாக அமைந்திருக்கிறது என்று உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ கமலநாதன் கடுமையாகச் சாடினார்.

செரெண்டா தமிழ்ப்பள்ளியைச் சூழ்ந்திருக்கும் தடைகள் குறித்து, கடந்தாண்டு டிசம்பரில் கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், டத்தோ கமலநாதன் பகீரங்கமாக அம்பலப்படுத்தினார். அதன் பிறகாவது இப்பள்ளி விவகாரத்திற்கு தீர்வு கொணர வேண்டிய அப்பள்ளியின் வாரியக் குழுவினர், தொடர்ந்து அமைதி காத்து வருகின்றனர். அதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் அப்பள்ளி எழாததற்குக் காரணமாக என்னை முன்னிலைப்படுத்துகின்றனர் என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

தனது சொந்தத் தொகுதியில் இப்பள்ளியை மிக பிரம்மாண்டமாக கட்டுவதற்கு எல்லா வகையிலும் தான் முயற்சி எடுத்து வந்ததாகக் குறிப்பிட்ட டத்தோ கமலநாதன், கட்டுமானத் திட்டத்தை நிறுத்துவதற்கு பள்ளியின் வாரியக் குழுவினர் உலுசிலாங்கூர் மாவட்ட மன்றத்திற்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியதுதான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்றார்.

இது தொடர்பாக அவர் அளித்த விளக்கம்:

கடந்த 2012ஆம் ஆண்டில், புதிய நிலத்தில் செரெண்டா தமிழ்ப்பள்ளியை கட்டுவதற்காக வெ.4.43 மில்லியன் மானியத்தை கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்தது. எனினும், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்கையில், கட்டுமானத் திட்டத்திற்கு வெ.2 மில்லியன் கூடுதலாக தேவைப்பட்டது. காலம் தாமதியாது கூடுதல் நிதிக்காக கல்வி அமைச்சிடம் விண்ணப்பம் செய்தேன். ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட வெ.4.43 மில்லியன் மானியத்தை வெ.6.43 மில்லியனாக உயர்த்த, 2013இல் கல்வி அமைச்சு அங்கீகரித்தது.

பள்ளிக்கான 2 ஏக்கர் நிலத்தை ‘யு.எம்.டபள்யூ கார்ப்பரேஷன்’ (UMW CORPORATION) நிறுவனம், பள்ளியின் வாரியக் குழுவிடம் வழங்கியது. அந்நிறுவனத்துடனான நில ஒப்பந்த உடன்படிக்கையில், அந்த வாரியக் குழுவே கையெழுத்திட்டது. ஆனால், அதன் பிறகு கட்டுமானத் திட்டம் தொடர்பான எந்தவொரு தஸ்தாவேஜுகளிலும் அந்த வாரியக் குழு கையெழுத்திடாமல் தொடர்ந்து மறுத்து வருவதே, கட்டுமானப் பணியின் இழுபறிக்குக் காரணம்.

எனினும், சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனம் கட்டுமானப் பணியை தொடங்குவதற்கு வகை செய்யும் ‘நிபந்தனையுடனான திட்டமிடல்’ (Conditional Planning Approval) ஒப்புதலை உலுசிலாங்கூர் மாவட்ட மன்றத்திடமிருந்து பெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்நிலத்தில் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

மீண்டும் ஒரு சிக்கல் வந்தது. பள்ளியை முழுமையாகக் கட்டி முடிக்கும் அனைவரின் கனவும், அப்பள்ளி வாரியக் குழுவைச் சேர்ந்த ஓர் உறுப்பினரால் மீண்டும் களைந்தது. கட்டுமானப் பணியை நிறுத்தக்கோரி, அந்த உறுப்பினர் உலுசிலாங்கூர் மாவட்ட மன்றத்திற்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து, கட்டுமானப் பணியை முழுமையாக நிறுத்துமாறு அந்த மாவட்ட மன்றமும் தடைக்கல்லை போட்டது.

திட்டமிட்படி இப்பள்ளியை கட்டிமுடிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் கைகொடுத்தால், எல்லாப் பணிகளும் சுமுகமாக நிறைவுறும். அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன். அதுவரை, இப்பள்ளிக்கான மானியமும் கல்வி அமைச்சிடம் பாதுகாப்பாக இருக்கும். அந்த மானியம் நிச்சயமாக மாயமாகாது! காரணம், கட்டுமான குத்தகை நிறுவனத்துக்கு வேலையின் அடிப்படையில் படிப்படியாகத்தான் நிதி வழங்கப்படும். அதுதான் நடைமுறை. மானியத்தைப் பற்றி யாரும் கவலைக் கொள்ள வேண்டாம்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான அரசாங்கம், வெளிப்படையானது; நம்பிக்கைக்குப் பாத்திரமானது. பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பது போல, இந்த செரெண்டா தமிழ்ப்பள்ளியைச் சூழ்ந்திருக்கும் தடைகளும் உடைக்கப்பட்டு, கட்டுமானத் திட்டம் ஒரு நாள் முழுமையுறும் என்று டத்தோ கமலநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், செரெண்டா தமிழ்ப்பள்ளிக்கான நிலம் பிரதான சாலையிலிருந்து உட்புறத்தில் இருப்பதால், ஓர் இணைப்புப் பாலத்தை நிறுவ கல்வி அமைச்சின் வழி வெ.5 லட்சம் மானியத்தையும், அங்குள்ள மின்சார கம்பங்களையும் உயரமாக நிறுவ வெ.1 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தையும் டத்தோ கமலநாதன் பெற்றுத் தந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன