மென்செஸ்டர், மார்ச்.31 –

மென்செஸ்டர் சிட்டியின் மத்திய திடல் ஆட்டக்காரர் ரஹீம் ஸ்டேர்லிங்கை வாங்க ஐரோப்பாவின் முன்னணி கிளப்புகள் ஆர்வம் காட்டி வரும் வேளையில் அவரை எளிதில் இதர கிளப்புகளுக்கு விட்டு கொடுக்கப் போவதில்லை என நிர்வாகி பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார். ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், பார்சிலோனா, பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன் அணிகள் ஸ்டேர்லிங்கை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

23 வயதுடைய ஸ்டேர்லிங் தற்போது வாரம் ஒன்றுக்கு 1 லட்சத்தும் 80 ஆயிரம் பவுன்ட் ஸ்டேர்லிங்கை சம்பளமாக பெற்று வருகிறார். 2020 ஆம் ஆண்டு வரை மென்செஸ்டர் சிட்டியுடன் ஒப்பந்தம் கொண்டுள்ள ஸ்டேர்லிங்கின் ஒப்பந்த மதிப்பு 10 கோடி ஈரோ டாலரை எட்டும் என கணிக்கப்படுகிறது.

ஸ்டேர்லிங்கை வாங்க இதர கிளப்புகள் ஆர்வம் காட்டுவதை தாம் அறிந்திருப்பதாக குவார்டியோலா தெரிவித்தார். கேவின் டி புரூன், டாவிட் சில்வா போன்று ஸ்டேர்லிங்குக்கும் புதிய ஒப்பந்தம் வழங்க மென்செஸ்டர் சிட்டி ஆலோசித்து வருகிறது. இந்த பருவத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியில் ஸ்டேர்லிங் 20 கோல்களைப் போட்டு அதிரடி படைத்துள்ளார்.