கோலாலம்பூர், ஏப். 2-
பிறந்து சிறந்த மொழிகளிலே சிறந்தே பிறந்த மொழி தமிழ். அவனியில் அவதரித்த அத்தனை மொழிகளிலும். ஏற்றம் மிகக் கொண்ட ஏகாந்த மொழி. உயர் தனிச் செம்மொழி தமிழ். தமிழ் மொழியின் வெற்றி, நமது இனத்தின் எல்லைகளை தாண்டி, பிற இன மலேசியர்கள் இன மொழி போதமின்றி தமிழை கற்க செய்தலிலே உள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
உடலுக்கு உரமேற்றும் உயிர்க்கு உணர்வூட்டும் மொழி, தமிழ். இலக்கிய இலக்கண அழகுடன், காலத்தை வென்று பல நூற்றாண்டுகளைக் கடந்து இனிமை குன்றாமல் நெஞ்சத்தை நெகிழச் செய்கிறது, அருந்தமிழ். முச்சங்கம் அமைத்து மொழி வளர்த்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ளது. அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே, ஓலைச் சுவடி, செப்பேடு ஆகியவற்றில் தமிழ் மொழி எழுதப்பெற்று வந்துள்ளது. காலத்தை வென்ற மொழி, தமிழ் மொழி என இன்று சன் பெங் தமிழ்ப் பள்ளியில் தொடங்கிய கூட்டரசுப் பிரதேச மாநில அளவிலான செந்தமிழ் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
ஒலி வடிவம், வரி வடிவம் என்ற வடிவங்களைக் கொண்ட பொருள் தரும் மொழி, தமிழ். எந்த மொழியின் துணையும் இன்றி தனித்து இயங்கும் சிறப்பு தமிழுக்கு உண்டு. திருவள்ளுவர், கவிச்சக்ரவர்த்தி கம்பன், புரட்சி கவிஞர் அமரகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசனும், அணைத்துக் கொண்டு கவிபாடி களித்த மொழி, இன்பத் தமிழ். இலக்கண, இலக்கிய செல்வங்கள் நிறைந்தது தமிழ் மொழி.
உயர்ந்த சிந்தனை, வரலாற்றுப் பின்னணி, தனித்துவம், காலத்திற்கேற்ற புதுமை இப்படியாக தமிழுக்கு பல சிறப்புகள் உள்ளன. பல்லாயிரம் ஆண்டுகள் இலக்கிய தொன்மை வாய்ந்தது. இது தமிழின் தனிச் சிறப்பு. காப்பியங்களும், கல்வெட்டுகளும், சிற்பங்களும், கட்டிடங்களும் தமிழ் மொழியின் தொன்மைக்கு சான்று. இது வெறும் வார்த்தை மொழியல்ல, வர்த்தக மொழி மட்டும் அல்ல. இது, அறத்தின் மொழி, பண்பாட்டு மொழி, வாழ்வியல் நெறி சொன்ன மொழி என தமிழ்மொழியின் பெருமை குறித்து அவர் பேசினார்.
இறுதியாக, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதன் ஏற்பாட்டு குழுவினரைப் பாராட்டிய டத்தோஸ்ரீ சரவணன் இதுப்போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
ஆரம்ப, தேசிய மொழி, இடை நிலைப்பள்ளிகளைச் சார்ந்த சுமார் 300 மாணவர்கள் இந்த 2 நாள் விழாவில் பங்கு கொள்கின்றனர்.