மகாதீரை நம்பி இந்திய சமுதாயம் ஏமாந்துவிடக்கூடாது!

0
3

கோலாலம்பூர், ஜூலை 31-

தற்போது எதிர்கட்சியில் இருக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை இந்திய சமுதாயம் நம்பி ஏமாந்துவிடக்கூடாது என ம.இ.காவின் தேசியத் துணைத்தலைவரும் பிரதமர்துறை துணையமைச்சருமான செணட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார்.

நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில் மலாய்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என பிரித்தாளும் போக்கை அவர் கடைப்பிடித்தார். அரசாங்கத் துறைகளிலும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் இந்தியர்களின் எண்ணிக்கையை குறைத்தார். குறிப்பிட்ட இனத்தின் மேம்பாட்டிற்காக மட்டுமே பல கொள்கைகளை உருவாக்கியவர் அவர். ஒரு காலத்தில் காப்புறுதி நிறுவனங்களில் இந்தியர்கள் ஆதிக்கம் இருந்தது. அடகு கடை வியாபாரம்கூட நம்மவர்களின் வசம் இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை மாறியதற்கு அவர்தான் மூல காரணம் என நேற்று ம.இ.கா. கூட்டரசு பிரதேச சீபூத்தே தொகுதியின் 23ஆவது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி கூறினார்.

பெர்சாத்து கட்சியின் அவைத் தலைவரான துன் டாக்டர் மகாதீரின் நோக்கம் மலாய்காரர்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்பதே ஆகும். அவர் எதிர்கட்சியில் இப்போது இருந்தாலும் அவரது நோக்கம் இன்னமும் மாறவில்லை. அம்னோவை கடுமையாக விமர்சித்து அக்கட்சியின் ஆதரவாளர்களை தன் கட்சியின் பக்கம் இழுத்து மலாய்காரர்களை வலுபடுத்த வேண்டும் என நினைக்கிறார். அவரது பேச்சை இந்திய சமுதாயம் நம்பி விடக்கூடாது.

ம.இ.காவில் ஏற்பட்ட நெருக்கடிக்கு பிறகு நம்மிடம் ஏறக்குறைய மூவாயிரம் கிளைகள் இருந்தன. ஆனால், தற்போது 4000க்கும் மேற்பட்ட கிளைகள் நம் பக்கம் உள்ளன. 9 கிளைகள் மட்டுமே வெளியில் இருக்கின்றது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களும் நம்முடன் இணைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் 7 வருடத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்காக 1 பில்லியன் நிதியுதவியை அளித்துள்ளார். தெக்குன், அமானா இக்தியார், எஸ்.எம்.ஈ. முதலானவற்றின் வாயிலாக 1.3 பில்லியன் நிதியை வழங்கியுள்ளார். கடனை வாங்கியவர்கள் அதனைத் திருப்பி செலுத்த வேண்டும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் மதிக்கத்தக்க சமுதாயமாக அது இருக்காது.

ம.இ.காவில் நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் சில கட்சிகள் இந்தியர்களின் பிரதிநிதி என தங்களை அடையாளப்படுத்த முயன்றன. அரசு சார்பற்ற இயக்கங்கள் தனித்து இயங்கத் தொடங்கின. ஆனால், தற்போது ம.இ.கா. வலுவான கட்சியாக திரும்பியிருப்பதோடு 4000க்கும் மேற்பட்ட கிளைகள் நம் பக்கம் இருப்பதை பிரதமரிடம் தெரிவித்து வருகிறோம்.

பாஸ் கட்சியின் தனிநபர் சட்ட மசோதாவை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது நாங்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தோம். அதன் விளைவுகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். நம் நாட்டின் சட்டத்திட்டத்தில் உள்ளது போல் நமது உரிமைகளுக்காக ம.இ.காதான் போராடி வருகின்றது. அதேவேளையில், ம.இ.கா. இந்திய வாக்காளர்களை குறிப்பாக இளைஞர்களை கவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி கோரிக்கை விடுத்தார்.