அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மிஃபா மீதான அவதூறுகளுக்கு டத்தோ டி.மோகன் விளக்கம்!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மிஃபா மீதான அவதூறுகளுக்கு டத்தோ டி.மோகன் விளக்கம்!

கோலாலம்பூர் ஏப். 3-

இந்திய சமுதாய இளைஞர்களுக்கு காற்பந்துத்துறையில் ஏற்றத்தையும், மாற்றத்தையும், ஏற்படுத்தி வரும் மிஃபா குறித்து தவறான கண்ணோட்டங்கள் நிலவி வந்த நிலையில் அது குறித்தும், மிஃபாவிற்கு கிடைத்த அரசாங்க மானியங்கள் குறித்தும் எதிர்கட்சி இந்தியத் தலைவர்களிடம் டத்தோ டி.மோகன் தலைமையில் மிஃபா நிர்வாகத்தினர்கள் வெளிப்படையான விளக்கத்தை அளித்தனர்.

மிஃபாவைப்போல செடிக் மூலம் மானியங்கள் பெற்ற மற்ற அமைப்புகளும் வெளிப்படையான விளக்கத்தை அளிப்பார்களா? என எதிர்கட்சி இந்தியத்தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

செடிக் மானியங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் மிஃபாவிற்கு மற்றும் சில அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் தெரிவித்தார். அத்தகைய சூழலில் சரியான விளக்கம் கிடைக்கபெறாத நிலையில் மிஃபா குறித்து தவறான கண்ணோட்டங்கள் எழ காரணமாக இருந்ததே தவிர மிஃபா மீது எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என சிவக்குமார் குறிப்பிட்டார்.

டத்தோ டி.மோகன் தலைமையில் மிஃபா நிர்வாகக்குழு துல்லியமாக மிஃபாவிற்கு வழங்கப்பட்ட மானியங்கள், அதன் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தனிப்பட்ட முறையிலும், நல்ல உள்ளங்களின் ஆதரவிலும், மிஃபா ஆற்றி வரும் எண்ணற்ற செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

டத்தோ டி.மோகன் குறிப்பிடுகையில் காற்பந்துத்துறை மிகப்பெரியது அதில் சமுதாய இளைஞர்களை ஈடுபடுத்தி அவர்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தலாம் அதனை மையப்படுத்தி மிஃபா பல இன்னல்களுக்கு மத்தியில் செயல்பட்டு வருகின்றது. சமுதாயத்தில் காற்பந்துத்துறையின் வழி மாற்றத்தை ஏற்படுத்த மிஃபா முயல்கின்ற நிலையில் அது மீதான தவறான கண்ணோட்டங்கள் மிஃபா ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.

இந்த மாதிரியான விளக்கத்தை மிஃபா அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என மாண்புமிகு சிவக்குமார், மாண்புமிகு மணிவண்ணன், மாண்புமிகு சந்திரமோகன், மாண்புமிகு கஸ்தூரி பட்டு ஆகியோர் தெரிவித்தனர். செடிக் மானியங்கள் பல அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் குறிப்பாக சக்தி பக்தி, எஸ்.எம்.சி, பவர் மலேசியா உள்ளிட்ட அமைப்புகளும் மிஃபா போல வெளிப்படையான விளக்கத்தை அளிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மற்ற அமைப்புகளின் நிலைப்பாடு குறித்து கருத்துரைக்க இயலாது ஆனால் மிஃபாவைப்பொறுத்த வரையில் அதன் நிர்வாகம் வெளிப்படையானது எங்களது நிர்வாகம் குறித்து அறிய எங்களை நாடலாம்.அதே நேரத்தில் மிஃபாவை வழிநடத்த எண்ணமிருந்தாலும் அதற்கு வழி விட நாங்கள் தயார் என டத்தோ டி.மோகன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன