சென்னை, ஏப். 4-

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை சேர்ந்த பிரகாஷ் [வயது 21]. தனது தாய் மற்றும் தங்கையுடன் ஜவுளிக்கடைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் இருவரையும் பின்னால் அமர வைத்துக் கொண்டு வீடு திரும்பியதாகக் கூறப்படுகின்றது.

அப்போது பிரகாஷ் தலைக்கவசம் அணியாததால் அவரை போலீசார் மடக்கி நிறுத்தி இருக்கின்றனர். மேலும், மூன்று பேர் பைக்கில் அமர்ந்து வந்ததும் தவறு என்று போலீசார் கடுமையாக கூறி இருக்கின்றனர். அப்போது பிரகாஷ் மற்றும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பிரகாஷ் தாயை போலீசார் அடித்ததாக கூறப்படுகின்றது. இதனை கண்டு கோபமடைந்த பிரகாஷ் இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்துள்ளார். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் ஒன்று கூடி பிரகாஷை பிடித்து அங்குள்ள கம்பத்துடன் சேர்த்து வைத்து பிடித்துக் கொண்டு சரமாரியாக தாக்குகின்றனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பிரகாஷின் விரல்களை போலீஸ்காரர் ஒருவர் முறிக்கும் காட்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்று போலீசார் வாகன ஓட்டிகளை முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அண்மையில் திருச்சியில் ஹெல்மெட் போடாமல் வந்த இருசக்கர வாகனத்தை போலீஸ்காரர் ஒருவர் எட்டி உதைத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.