கோலாலம்பூர், ஏப்.5- 

மலேசியர்களுக்கு அதிர்வெண் அடையாள தொழில்நுட்பம் கொண்ட அட்டையை (ஆர்.எஃப்.ஐ.டி) இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து துணையமைச்சர் டத்தோ அப்துல் அசிஸ் கப்ராவி தெரிவித்தார்.

இந்த அட்டை தொடர்பில் அரசாங்கம் டச் என் கோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இந்த அட்டை அடுத்தாண்டு தொடக்கத்தில் மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

ஆர்.எஃப்.ஐ.டி உண்மையில் பேட்டரி இல்லாமல் பயன்படுத்தக்கூடிய நடப்பு தொழில்நுட்பம் கொண்டது. அதிநவீன முறையில் தூரத்திலேயே விவேகமாகவும் விரைவாகவும் கண்டறியக்கூடிய ஆற்றலை அது கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பின் வாயிலாக கண்டறிவதற்கு இது எளிதானதாக உள்ளது. நாட்டின் எல்லையை கடக்கும் போது வாகனத்தை நிறுத்தத் தேவையில்லை. சாலை நெரிசல்கள் இல்லாமல் தொடர்ந்து செல்லலாம்.

மலேசியாவிற்குள் கொண்டு வரப்படும் வாகனங்கள் மீண்டும் அந்நிய நாடுகளுக்கு திரும்பாததைக் கண்டறிய ஆர்.எஃப்.ஐ.டி அரசு மலேசிய போலீஸ் படை மற்றும் சுங்கத்துறையுடன் ஒத்துழைக்க முடியும் என இன்று நாடாளுமன்றத்தில் டத்தோ அப்துல் அசிஸ் கப்ராவி கூறினார்.

இதற்கு முன்னர், மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் தலைமை இயக்குநர் டத்தோ இஸ்மாயில் முஹம்மட் சாலே கூறுகையில், ஆர்.எஃப்.ஐ.டி அட்டை நாடு தழுவிய நிலையில் பல்வேறு டோல் சாவடிகளில் பரிசோதிக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தார்.