உலுசிலாங்கூர், ஏப். 6

செரெண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமான பிரச்னைக்கு துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி கமலநாதன் சுமூகமான முறையில் தீர்வு கண்டுள்ளார்.

இத்தணை ஆண்டுகளாக கட்டுமானப் பணிகளுக்கு தடையாய் இருந்து வந்த தரப்பினருடன் மிகப் பலமாக நடத்தப்பட்ட சில பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, புதிய வாரியக் குழு அமைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த முழு விவகாரத்திற்கும் முக்கிய நபராக விளங்குகின்ற ராமராவ், இறுதியாக டத்தோ கமலநாதனுடன் நேற்று கைக்கோர்த்தார். இதன்வழி, செரெண்டா தமிழ்ப்பள்ளி விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நேற்று காலை 9.00 மணிக்கு, செரெண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமான தலத்திற்கு டத்தோ கமலநாதன் வருகை புரிந்தார். உடன் ராமராவ், பள்ளியின் வாரியக் குழுத் தலைவர் ராமசாமி, மஇகா உலுசிலாங்கூர் தொகுதித் தலைவர் பாலசுந்தரம், மக்கள் சக்தி கட்சியின் உலுசிலாங்கூர் தொகுதித் தலைவர் மதன், பள்ளியின் அதிகாரப்பூர்வ கட்டுமான குத்தகையாளர்கள் உட்பட வட்டார சமூகத் தலைவர்கள் சிலரும் வந்திருந்தனர்.

அனைத்துத் தரப்பினருடனும் கைக்கோர்த்த டத்தோ கமலநாதன், செரெண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணி மீதான தடை இதோடு விலகுகிறது என்று, மீண்டும் இன்று தொடங்கப்படுகின்ற கட்டுமானப் பணிகள் அடுத்த 12 மாதத்திற்குள் முழுமையுறும் என்று வாக்குறுதி அளித்தார்.

மிஞ்சாக் தோட்டத்திலுள்ள பள்ளியை இங்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், செரெண்டா தமிழ்ப்பள்ளியாக இது மருவியிருக்கிறது. ‘யு.எம்.டபள்யூ. கார்ப்பரேஷன் (UMW Corporation) நிறுவனம் இப்பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கியது. அதை உரிமைக் கொண்டாடும் போராட்டத்தினால்தான் கட்டுமானப் பணிகள் இருமுறை முடக்கம் கண்டன.

அந்த விவகாரத்தையெல்லாம் ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு, இப்போது முத்தரப்பினரும் இணக்கப் போக்கை கையாண்டுள்ளோம். பள்ளியின் புதிய வாரியக் குழுத் தலைவராக ராமசாமி பொறுப்பேற்றுள்ளார். அறங்காவலர் குழுத் தலைவராக ராமராவ் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளியின் கட்டுமானத் திட்டக் குழுவின் தலைவராகவும் அவர் பொறுப்பில் இருப்பார். இதன் வழி, செரெண்டா தமிழ்ப்பள்ளியை எழவிடாமல் முடக்கியிருந்த இரும்புத் திரை அகற்றப்பட்டுள்ளது என உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ கமலநாதன் தெரிவித்தார்.

நிதி மாயமாகவில்லை!
இதற்கிடையில், செரெண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகளுக்காக கல்வி அமைச்சு வழங்கிய வெ.6.43 மில்லியன் மானியம் மாயமாகவிட்டதாக ஒரு சில தரப்பினர் கூறி வந்ததை டத்தோ கமலநாதன் முற்றாக மறுத்தார்.

அந்த மானியம் எங்கும் போய்விடவில்லை. கல்வி அமைச்சில் பத்திரமாக உள்ளது. பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்திற்குச் செல்லும் வழிப்பாதையில் ஓடை இருப்பதால், வெ.5 லட்சம் செலவில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மின் கம்பங்களை உயரே பொறுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விரு பணிகளுக்காக மட்டுமே மானியம் செலவிடப்பட்டுள்ளதே தவிர, எஞ்சிய மானியம் பத்திரமாக உள்ளது என்று டத்தோ கமலநாதன் விளக்கமளித்தார்.

எங்களுக்குள் பிரச்சினை இல்லை!

டத்தோ கமலநாதனுடன் சமரசம் கண்டுள்ள ராமராவ் பேசுகையில், எங்களுக்குள் இனி எவ்வித பிரச்னையும் இல்லை. தமிழ்ப்பள்ளிக்கூடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படுவதற்கு எனது முழு ஒத்துழைப்பு என்றும் இருக்கும். கட்டுமானத்திட்டக் குழுவுக்கு என்னை தலைவராக நியமித்திருக்கிறார். இது எனக்கு மகிழ்ச்சியே! என்றார்.

பொதுமக்கள் ஆவேசப்பட வேண்டாம்!

செரெண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதைச் சுற்றியிருந்த சிக்கல்களிய போக்க, எங்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. சகோதரர் ராமராவும் பள்ளியின் நலனை கருத்தில் கொண்டு சமரசம் செய்து கொண்டார். இதன்வழி எல்லா பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. பொதுமக்கள் இனியும் ஆவேசப்பட வேண்டாம். அடுத்த ஆண்டுக்குள் இப்பள்ளி முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்று வாரியக் குழுத் தலைவர் ராமசாமி குறிப்பிட்டார்.

பொதுமக்கள் ஆவேசப்பட வேண்டாம்!

செரெண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதைச் சுற்றியிருந்த சிக்கல்களிய போக்க, எங்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. சகோதரர் ராமராவும் பள்ளியின் நலனை கருத்தில் கொண்டு சமரசம் செய்து கொண்டார். இதன்வழி எல்லா பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. பொதுமக்கள் இனியும் ஆவேசப்பட வேண்டாம். அடுத்த ஆண்டுக்குள் இப்பள்ளி முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்று வாரியக் குழுத் தலைவர் ராமசாமி குறிப்பிட்டார்.

மக்கள் சக்தியின் ஆதரவு இருக்கும்!

செரெண்டா தமிழ்ப்பளி விவகாரம் குறித்து பல தரப்பினர் அவதூறு பரப்பி வந்தனர். இது குறித்து டத்தோ கமலநாதனுடன் பேசியப் பிறகுதான் உண்மை நிலை தெரியவந்தது. இப்போது எல்லா தரப்பினரும் ஒன்றுகூடியுள்ளனர். கட்டுமானப் பணியும் மீண்டும் தொடங்கிவிட்டது. இனிமேலும், இப்பள்ளி விவகாரத்தில் யாரும் அவதூறானச் செய்திகளைப் பரப்ப வேண்டாம். இக்கட்டுமானப் பணி முழுமையுறும் வரை மக்கள் சக்தியின் ஆதரவு இருக்கும் என்று மக்கள் சக்தி கட்சியின் உலுசிலாங்கூர் தொகுதித் தலைவர் மதன் குறிப்பிட்டார்.