வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தெக்குன் உள்ளிட்ட கடன்களை திரும்ப வசூலிப்பதில் புதிய அணுகுமுறை! 
முதன்மைச் செய்திகள்

தெக்குன் உள்ளிட்ட கடன்களை திரும்ப வசூலிப்பதில் புதிய அணுகுமுறை! 

கோலாலம்பூர், ஜூலை 31-
கடந்த 7 வருடத்தில் மட்டும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமிழ்ப்பள்ளிகளுக்காக 1 பில்லியன் நிதியுதவியை அளித்துள்ளார். அதோடு, தெக்குன், அமானா இக்தியார், எஸ்.எம்.ஈ. முதலானவற்றின் வாயிலாக 1.3 பில்லியன் நிதியை வழங்கியுள்ளார்.

கடனை வாங்கியவர்கள் அதனைத் திருப்பி செலுத்தாமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாக ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் பிரதமர்துறை துணையமைச்சருமான செணட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார்.

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் மதிக்கத்தக்க சமுதாயமாக அது இருக்காது. அவர்கள் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். இதனால், அவர்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அக்கடன்களை திரும்ப வசூலிப்பதற்கு புதிய அணுகுமுறை ஆராயப்பட்டு வருவதாக அண்மையில் ம.இ.கா. கூட்டரசு பிரதேச சீபூத்தே தொகுதியின் 23ஆவது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய அவர் கூறினார்.

ம.இ.காவில் நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் சில கட்சிகள் இந்தியர்களின் பிரதிநிதி என தங்களை அடையாளப்படுத்த முயன்றன. அரசு சார்பற்ற இயக்கங்கள் தனித்து இயங்கத் தொடங்கின. ஆனால், தற்போது ம.இ.கா. வலுவான கட்சியாக திரும்பியிருப்பதோடு 4000க்கும் மேற்பட்ட கிளைகள் நம் பக்கம் இருப்பதை பிரதமரிடம் தெரிவித்து வருகிறோம்.

பாஸ் கட்சியின் தனிநபர் சட்ட மசோதாவை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது நாங்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தோம். அதன் விளைவுகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். நம் நாட்டின் சட்டத்திட்டத்தில் உள்ளது போல் நமது உரிமைகளுக்காக ம.இ.காதான் போராடி வருகின்றது. அதேவேளையில், ம.இ.கா. இந்திய வாக்காளர்களை குறிப்பாக இளைஞர்களை கவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பேசிய ம.இ.கா. சீபூத்தே தொகுதியின் தலைவர் ஆர்.நடராஜன் கூட்டரசு பிரதேசத்திலும் நாட்டிலும் பொருளாதார வகையில் சிறப்பான தொகுதியாக இத்தொகுதி விளங்குவதாக கூறினார்.  ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் உருமாற்ற திட்டங்களுக்கு உறுதுணையாக இத்தொகுதி இருந்து வருவதாக கூறிய அவர், வருகின்ற பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நடராஜன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் ம.இ.கா. சீபூத்தே தொகுதியின் வளர்ச்சிக்கு சிறப்பாக பங்காற்றிய ராதாகிருஷ்ணன், எஸ்.வி.எஸ்.வேலு, டான்ஸ்ரீ சுப்ரமணியம், ராமசுந்தரம், லெட்சுமி, சரோஜினி ராஜூ, ராமமூர்த்தி, கண்ணையா, கயம்பு நாதன் ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது. மறைந்த பச்சையப்பன், ஜெயபாலன், வடிவேலு ஆகியோரின் சார்பில் அவர்களின் பிரதிநிதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இம்மாநாட்டில் தேசிய உதவித்தலைவர் செணட்டர் டத்தோஸ்ரீ ஜஸ்பால் சிங், கூட்டரசு பிரதேச செராஸ் தொகுதி தலைவர் டத்தோ பெரு.கருப்பன், கூட்டரசு பிரதேச செயலாளர் டத்தோ ராஜா, சீபூத்தே தொகுதியின் நிரந்தர தலைவர் டத்தோஸ்ரீ பி.கிருஷ்ணமூர்த்தி உள்பட தொகுதி மற்றும் கிளைத்தலைவர்கள் முதலானோர் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன