அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > அதிமுக அலுவலகத்துக்குள் தினகரன் நுழைவதைத் தடுக்க அமைச்சர்கள் அவசர ஆலோசனை
இந்தியா/ ஈழம்

அதிமுக அலுவலகத்துக்குள் தினகரன் நுழைவதைத் தடுக்க அமைச்சர்கள் அவசர ஆலோசனை

சென்னை: அதிமுக அலுவலகத்துக்கு வருமாறு கட்சி நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளது குறித்து தமிழக அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அதிரடி அரசியலை காட்டாமல் இருந்த அவர் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் தனது அரசியல் பணிகள் வேகமெடுக்கும் என்று தஞ்சாவூரில் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு திட்டங்களை வகுப்பது குறித்து ஆலோசனை நடத்த வரும் 5-ஆம் தேதி நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருமாறு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அதிமுகவில் இருந்தே ஒதுக்கி வைப்பதாக தங்களால் அறிவிக்கப்பட்ட பிறகும், தினகரன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அமைச்சர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அதிமுகவின் தலைமை அலுவலகத்துக்கு வந்துவிடக் கூடாது என அமைச்சர்கள் விரும்புகின்றனர். அதனால் தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவி சண்முகத்தின் அறையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோல் குறித்தும் அமைச்சர்கள் விவாதித்தனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன