மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் இடஒதுக்கீடு செல்லாது: ஹைகோர்ட்

0
14

சென்னை: மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 85 சதவீதம் உள்ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

நாடு முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கு வழிவகுக்கும் நீட் தேர்வு பல்வேறு எதிர்ப்புகளை மீறி நடத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் கட்ஆப் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மருத்துவ சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த நீட் தேர்வானது தமிழக மாணவர்களுக்கு பேரிடியாக அமைந்தது.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அமைச்சர்கள் மாறி மாறி மத்திய சுகாதார துறை அமைச்சரை சந்தித்து வந்த போதிலும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

இதன்படி, மருத்துவ படிப்பில் 2203 இடங்கள் மாநில பாட திட்ட மாணவர்களுக்கும், 391 இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் கிடைக்கும். அகில இந்திய இடஒதுக்கீடு போக தமிழகத்தில் மொத்தம் 2594 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் 624 இடங்கள் அரசுக்கு கிடைக்கும். இந்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி ரவிச்சந்திரபாபு அந்த அரசாணையை ரத்து செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கானது நீதிபதிகள் மோகனராவ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், நீட் தேர்வை எதிர்கொள்ளும் அளவுக்கு மாணவர்களை தயார் படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. எனவே இந்த 85 சதவீதம் உள் ஒதுக்கீடு என்ற தமிழக அரசின் அரசாணை செல்லாது. மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை உடனே தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்புக்கு எதிராக நாளையே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என தெரிகிறது.