கோம்பாக், ஜூலை 31- 
கோம்பாக் தொகுதியின் ஆதரவில் தாமான் சமுத்திரா கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வில் 100 க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடிகளை மஇகாவின் உதவித்தலைவரும், மிஃபாவின் தலைவருமான டத்தோ டி.மோகன் வழங்கி சிறப்பித்தார்.
கோம்பாக் தொகுதியை சார்ந்த கண் குறைபாடு உடையவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்க முனைப்பு காட்டியதாகவும் அதற்கு டத்தோ டி.மோகன் அவர்கள் முழு உதவிக்கரம் நீட்டியதாகவும், அவருக்கு இவ்வேளையில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும்  தாமான் சமுத்திரா கிளை தலைவி ரேவதி மாரிமுத்து குறிப்பிட்டார்.
கண் குறைபாடு உடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான ஆய்வுகள் செய்து அவர்களுடைய குறைபாடுகளுக்கு ஏற்ப இந்த கண்ணாடிகளை வழங்கியுள்ளோம் மேலும்  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் கண்ணாடிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மஇகாவின் உதவித்தலைவராகவும், சமுதாய நலன் சார்ந்தும் டத்தோ டி.மோகன் அவர்கள் தன்னால்  முடிந்த அளவில் எண்ணற்ற நல்ல காரியங்களை செய்து வருகிறார். அதனைத்தொடர்ந்து இந்த இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வுக்கும் உதவிக்கரம் நீட்டினார். இவரைப்பொறுத்த வரையில்   விளையாட்டுத்துறை சார்ந்து நமது இளைஞர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார் என கோம்பாக் தொகுதித்தலைவர் சுகுமாறன் புகழாரம் சூட்டினார்.