பிரீமியர் லீக் – வீழ்ந்தது மென்செஸ்டர் யுனைடெட் ; லீக் பட்டத்தை வென்றது மென்செஸ்டர் சிட்டி

0
18
மென்செஸ்டர், ஏப்.16-
2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வென்று மென்செஸ்டர் சிட்டி  சாதனைப் படைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டியின் பரம வைரியான மென்செஸ்டர் யுனைடெட் 0-1 என்ற கோலில் வெஸ்ட் புரோம்விச் அல்பியோன் அணியிடம் தோல்வி கண்டது.
இதனையடுத்து மென்செஸ்டர் யுனைடெட்டைக் காட்டிலும் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ள மென்செஸ்டர் சிட்டி தனது லீக் பட்டத்தை உறுதிச் செய்தது. பிரீமியர் லீக் போட்டியில் இன்னும் ஐந்து லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள வேளையில் மென்செஸ்டர் சிட்டி ஐந்தாவது முறையாக லீக் பட்டத்தை வென்று சாதனைப் படைத்திருக்கிறது.
அதேவேளையில் கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று முறை லீக் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த ஆண்டில் மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி பொறுப்பை ஏற்ற பெப் குவார்டியோலா தனது இரண்டாவது பருவத்தில் லீக் பட்டத்தை வென்றுள்ளார். முன்னதாக ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் நடந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் வெளிப்படுத்திய ஆட்டம் அதன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முதல் பாதி ஆட்டத்தை ஆக்கிரமித்திருந்தாலும் கோல் போடுவதில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் வெளிப்படுத்தவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 73 ஆவது நிமிடத்தில் ஜே ரோட்ரிகுவேஸ் போட்ட கோல், வெஸ்ட் புரோம்விச் அல்பியோனின் வெற்றியை உறுதிச் செய்தது.
பிரீமியர் லீக் போட்டியில் இருந்து தகுதி இறக்கம் காணும் நிலையில் இருக்கும் வெஸ்ட் புரோம்விச், மென்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் வெளிப்படுத்திய ஆட்டத்தரம் தமக்கு மனநிறைவு அளிக்கவில்லை என நிர்வாகி ஜோசே மொரின்ஹோ தெரிவித்துள்ளார்.