கோலாலம்பூர், ஜூலை 31-
ஐநாவின் 2017ஆம் ஆண்டு அனைத்துலக மாதிரி மாநாட்டில் மலேசிய மாணவியான பிரவீனா ராமகிருஷ்ணன் சாதனை புரிந்து மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இது குறித்து கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில் சுல்தான் பாட்லிஷா இடைநிலைப் பள்ளியின் மாணவியான பிரவீனா ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமையன்று மலேசியாவைப் பிரதிநிதித்து உலகளவில் 96 நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் மத்தியில் சிறந்த பேச்சாளராகவும் சிறந்த ஆய்வினைச் சமர்பித்ததற்காகவும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

பிரவீனாவின் சாதனையைக் கண்டு கல்வியமைச்சும் நாடும் பெருமையடைவதாக மாஹ்ட்ஸிர் குறிப்பிட்டார்.
பிரவீனாவின் சாதனைக் குறித்து நாடு முழுமைக்கும் ஆயிரக்கணக்கான சமூக வலைத்தளவாசிகள் தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருவதோடு அவரின் சாதனையைக் கண்டு நாடு பெருமையடைவதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

ஐநாவின் கூட்டு உறுப்பினரான ஐநா மாதிரி அனைத்துலக மன்றம் இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பு கல்வி சார்ந்த மாநாடுகளின் மூலம் உலகளாவிய பிரச்னைகளைக் களைய முனைப்புக் காட்டிவருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இம்மாதிரியான மாநாடுகளை அது நடத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.