ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதிதான் இறந்தார் என்பது நிரூபணமானது- வழக்கறிஞர் தகவல்

0
15

சென்னை, ஏப் 17-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம தேதி தான் இறந்தார் என்பது அவருக்கு ‘எம்பாமிங்’ செய்த டாக்டர் சுதா சேஷையனிடம் செய்த குறுக்கு விசாரணையில் நிரூபணமாகி உள்ளது என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, மகன் விவேக், அரசு மருத்துவர் சுவாமிநாதன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ரமணன், ஜெயலலிதா வீட்டில் சமையல் வேலை பார்த்த ராஜம்மாள், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உடற்கூறு இயல் துறை தலைவர் டாக்டர் சுதா சேஷையன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞரான ராஜாசெந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

இது குறித்து ராஜாசெந்தூர் பாண்டியன் கூறுகையில், கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு தாம் ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பாமிங் செய்யத்தாகவு அவரின் திசுக்களை பார்த்தபோது அவர் 15 மணிநேரத்திற்குள் தான் இறந்திருக்க வேண்டும் என்று சுதா சேஷையன் தெரிவித்தார்.

ஜெயலலிதா அடித்து கொல்லப்பட்டு இறந்துபோன பிறகு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும், இறந்துபோன ஜெயலலிதாவின் உடலை வெகு நாட்களாக அவர்கள் வைத்து இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டையும் தவிடு பொடியாக்கும் வகையில் டாக்டரின் சாட்சியம் அமைந்து இருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதிதான் ஜெயலலிதா மரணம் அடைந்துள்ளார் என்பதை சாட்சியமாக உறுதி செய்துள்ளார்.

டிசம்பர் 3ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள், ஜெயலலிதாவின் இதயம் நன்றாக உள்ளது என்று கையெழுத்துபோட்டு கொடுத்துள்ள ஆவணத்தை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். அதன் அடிப்படையில் அன்று ஜெயலலிதாவின் இதயம் நன்றாக இருந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 22 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து இருக்கிறோம். இன்னும் மீதம் இருக்கும் சாட்சிகளையும் தாமதமின்றி குறுக்கு விசாரணை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.