அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > போலீஸ் தடுப்பு காவலில் இந்திய ஆடவர் மரணம்
முதன்மைச் செய்திகள்

போலீஸ் தடுப்பு காவலில் இந்திய ஆடவர் மரணம்

பெட்டாலிங் ஜெயா, ஏப் 18-

2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றவியல் சட்டம் அல்லது சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் நேற்று ஷா ஆலாமில் போலீஸ் தடுப்பு காவலில் மரணமடைந்தார்.

வாகன பயிற்சி பள்ளி ஓட்டுநரான தனபாலன் சுப்ரமணியம் (வயது 38) நேற்று இரவு 8.20 மணியளவில் தடுப்பு காவலில் கீழே மயங்கி விழுந்து கிடந்ததை கண்ட போலீசார் அவரை ஷா ஆலம் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், அவர் 9.05 மணியளவில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் எஸ்ஏசி பாட்சீல் அஹ்மாட் தெரிவித்தார்.

தனபாலன் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அவரது உடல் சவப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சவப்பரிசோதனைக்கான அறிக்கை கிடைக்கப்பட்டப் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என இன்று செய்தியாளர் சந்திப்பில் பாட்சீல் குறிப்பிட்டார்.

காப்பாரைச் சேர்ந்த தனபாலன் கடந்த மார்ச் 29ஆம் தேதி தனது பிள்ளையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு திரும்பும் வேளையில் கைது செய்யப்பட்டார். தனபாலன் மரணமடைந்தது அவரது குடும்பத்திற்கு தெரிவிப்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.

சவப்பரிசோதனை அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்று போலீசிற்குத் தெரியாது. அதற்கு 2 அல்லது 3 நாட்கள் நீடிக்கலாம். சவப்பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டப் பின்னரே அவர் மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படும் என்று பாட்சில் தெரிவித்தார்.

இது ஒரு திடீர் மரணமாக இருந்தாலும் இச்சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன