பாரிஸ், ஏப். 19-

சுவீடன் கால்பந்து அணியின் மூத்த ஆட்டக்காரர் சிலாதான் இப்ராஹிமோவிச் வரும் ஜூன் மாதம் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்கான சாத்தியத்தை மறுக்கவில்லை. இதன் வழி அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இப்ராஹிமோவிச் மீண்டும் சுவீடன் தேசிய கால்பந்து அணிக்கு திரும்பவிருக்கிறார்.

ரஷ்யாவில் தாம் களமிறங்கவில்லை என்றால், அது உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியே அல்ல என இப்ராஹிமோவிச் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் , முதல் முறையாக உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் சுவீடன் பங்கேற்கவுள்ளது. தகுதிச் சுற்றில் இத்தாலியை வீழ்த்தியதன் வழி சுவீடன் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கிறது.

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தாம் செல்வது நிச்சயம் என இப்ராஹிமோவிச் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ஆனால் ஓர் ஆட்டக்காரராகவோ அல்லது அதிகாரியாக செல்கிறாரா என்பதை அவர் உறுதியாக கூறவில்லை. ஆக கடைசியாக 2006 ஆம் அண்டில் இப்ராஹிமோவிச், சுவீடன் அணியுடன் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்றிருந்தார்.