மென்செஸ்டர், ஆக.1 –
செல்சியின் மத்திய திடல் ஆட்டக்காரர் ,நெமஞ்சா மாத்திச் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இணைந்துள்ளார். 29 வயதுடைய மாத்திச் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்புடன் மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். மாத்திச்சை வாங்க மென்செஸ்டர் யுனைடெட் 4 கோடி ஈரோ டாலரை வழங்கியுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்சின் மொனாக்கோ அணியில் இருந்து திமியோ பாக்காய்கோவை செல்சி விலைக்கு வாங்கியிருப்பதை அடுத்து மாத்திச் அந்த அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். அதேவேளையில் தனது முன்னாள் நிர்வாகி ஜோசே மொரின்ஹோவுடன் இணைந்து பணியாற்ற தாம் மிகுந்த ஆவலைக் கொண்டிருந்ததாக மாத்திச் தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரிய கால்பந்து கிளப்புகளில் ஒன்றான மென்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்திருப்பது தமக்கு மகிழ்ச்சிய அளிப்பதாக அவர் மேலும் சொன்னார். இந்த பருவத்தில் மென்செஸ்டர் யுனைடெட்  பிரீமியர் லீக், ஐரோப்பிய வெற்றியாளர் லீக் போட்டிகளில் சிறந்த அடைவுநிலையை வெளிப்படுத்த தாம் உதவப் போவதாக மாத்திச் சூளுரைத்துள்ளார்.
மாத்திச்சின் வருகையை அடுத்து இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் பலம் வாய்ந்த அணியை களத்தில் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் போல் பொக்பா தனது ஆற்றலை வெளிப்படுத்த மாத்திச்சின் இணைப்பு உதவும் என கணிக்கப்படுகிறது.