எந்த கட்சியையும் சார்ந்திடாமல் நடுநிலைமையாக இருப்பேன்! சிலாங்கூர் சுல்தான்

0
5

ஷா ஆலம், ஏப். 20-
இந்நாட்டிலுள்ள எந்த கட்சியையும் சாராமல் நடுநிலைமையாக தாமும் சிலாங்கூர் அரண்மனையும் எப்பொழுதும் இருக்குமென சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்தார்.

எந்த வகையான அரசியல் போட்டிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. மாநில அளவிலும் தேசிய அளவிலும் அரசியல் விவகாரங்களில் தலையிட்டதில்லை எனவும் அவர் கூறினார்.

ஆட்சியாளர் என்ற நிலையில் அரசியலைக் கடந்து தாம் இருப்பதாகவும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவை தாம் வெளிபடுத்தக்கூடாது என்றும் இன்று வெளியிட்ட சிறப்பு செய்தியில் சிலாங்கூர் சுல்தான் குறிப்பிட்டார்.

தங்களின் தலைவர்களைத் தேர்தெடுப்பதில் மக்களின் சக்தியை தாம் மதிப்பதாகவும் எப்பொழுதும் அதன் மீது தாம் நம்பிக்கையைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். மலேசியாவில் இதுநாள் வரையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் அரசியலைப்பு முடியாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் அவர்களைப் பிரதிநிதிக்கக்கூடிய தகுதியான தலைவர்களைத் தேர்தெடுக்க முடியும் என தாம் கருதுவதாகவும் சிலாங்கூர் சுல்தான் கூறினார்.

புதிய அரசாங்கத்தைத் தேர்தெடுப்பதற்கான 14ஆவது பொதுத்தேர்தல் மே 9ஆம் தேதி நடைபெறும் என மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் பெர்லிஸின் பட்டத்து இளவரசர் துவான்கு சைட் ஃபைசுடின் புத்ரா ஜமாலுல்லாயில் அரசியல் கட்சிகளுக்கிடையிலான போட்டியில் எந்த கட்சியைச் சாராமலும் நடுநிலையாகவும் அரண்மனை இருக்கும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின், இந்த பொதுத்தேர்தல் காலத்தில் சர்ச்சை மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் மலேசிய மக்கள் குறிப்பாக சிலாங்கூர் மக்கல் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தினார். இந்த பொதுத்தேர்தல் முறையாகவும் மக்களிடையே எவ்வித வன்முறைகளையும் கலவரங்களையும் ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் நடைபெற வேண்டுமென தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.