ஜெலுபு தொகுதியில் மஇகா வேட்பாளர் நிறுத்தப்பட்டால் மலாய்க்காரர்களின் வாக்குகள் அவருக்கு எதிராக மாறலாம் என டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம் கூறியிருப்பது, இந்திய வாக்காளர்களை அம்னோ இழக்கும் நிலையை உண்டாக்கும்.

உறுப்புக் கட்சிகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது அனைத்துக் கட்சிகளின் கடமையாகும். இந்நிலையில் ம.இ.கா.விற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தேசிய முன்னணிக்கே பாதகமாக அமையலாம்.

222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 65 தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றியை முடிவு செய்வது இந்திய வாக்காளர்கள்தான். இந்த தொகுதிகளில் 10 விழுக்காட்டிற்கும் மேல் இந்திய வாக்காளர்கள் இருக்கின்றார்கள்.
இந்த அனைத்து தொகுதிகளிலும் மஇகா தமது ஓட்டு வங்கியை கொண்டுள்ளது.

இந்நிலையில் ஜெலுபுவில் மஇகாவிற்கு எதிராக அம்னோ உறுப்பினர்கள் வாக்களித்தால், 10 விழுக்காட்டிற்கும் அதிகமான இந்திய வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் அம்னோ தமது ஆதரவை இழக்கும். இது தேசிய முன்னணிக்கு பெரும் பாதகத்தை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது.

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி பெறவில்லை. இந்த தொகுதி மஇகாவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போர்டிக்சன் என பெயர் மாற்றப்பட்ட தெலுக் கெமாங் தொகுதியில் அம்னோ போட்டியிட விரும்புகின்றது.

அதற்கு மாறாக அம்னோவின் கோட்டையான ஜெலுபு தொகுதியில் மஇகா வேட்பாளரை நிறுத்தலாம் என தேசிய முன்னணி வியூகம் வகுத்துள்ளது. தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் மலாய்காரர்களின் ஆதரவில் அம்னோ வெற்றி பெற முடியுமென டத்தோஸ்ரீ நஜீப் நம்புகிறார்.

அதேபோல் ஜெலுபு அம்னோவின் கோட்டை என்பதால், இங்கு மஇகா வேட்பாளரை நிறுத்தினால், வெற்றி வாய்ப்பு உண்டு. இந்நிலையில் கூடுதலாக 1 நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்ற முன்னெடுக்கும் நடவடிக்கைதான் இந்த தொகுதி மாற்றம்.

ஆனால் இப்போது ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியை அம்னோ இழக்கக்கூடாது என அங்குள்ள டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம் உட்பட சில அம்னோ உறுப்பினர்கள் கண்டனக் குரல் எழுப்புகின்றார்கள். தொகுதி மாற்றப்பட்டால் அம்னோ மஇகாவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். இதில் மஇகாவிற்கு எதிராக சதிவேலை நடந்தால், அது இதர தொகுதிகளில் அம்னோவை பாதிக்குமென்பதில் மாற்று கருத்து இல்லை.