திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கல்வி மேம்பாட்டில் பெந்தோங் மாவட்ட கல்வி முன்னேற்ற கழகத்தின் சேவை அளப்பரியது!! டத்தோஸ்ரீ லியோவ்
சமூகம்முதன்மைச் செய்திகள்

கல்வி மேம்பாட்டில் பெந்தோங் மாவட்ட கல்வி முன்னேற்ற கழகத்தின் சேவை அளப்பரியது!! டத்தோஸ்ரீ லியோவ்

பெந்தோங், ஏப். 22-
அண்மையில் பெந்தோங் மாவட்ட கல்வி முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் 14ஆவது ஆண்டாக சிந்தனை செய் மனமே எழுச்சி நாள் 2018 எனும் நிகழ்ச்சி அங்குள்ள பெந்தோங் நகராண்மைக் கழகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ம.சீ.ச.வின் தேசியத் தலைவரும் போக்குவரத்துறை அமைச்சரும் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் இப்பகுதியிலுள்ள இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் ஆசிரியர் சண்முகம் தலைமையிலான கல்வி முன்னேற்ற கழகத்தின் சேவை அளப்பரியது என புகழாரம் சூட்டினார்.

பெந்தோங்கைச் சேர்ந்த இக்கழகத்திற்கு என்றென்றும் தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்த அவர், இந்திய மாணவர்களிடையே உயர்சிந்தனை, நன்னெறி பண்புகள், ஆரோக்கியமான சமூக வளர்ச்சி முதலானவற்றை இக்கழகம் விதைத்து வருவது பாராட்டுக்குரியது என கூறினார். பெந்தோங்கின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இங்குள்ள இந்தியர்களின் மேம்பாட்டில் அதிக கவனத்தைத் தாம் செலுத்துவதாகவும் குறிப்பாக, கோலாலம்பூருக்கு நிகராக உருமாறிவரும் பெந்தோங்கின் வளர்ச்சியில் இந்திய சமூகத்தின் பங்களிப்பு இருப்பதை தாம் உறுதி செய்வேன் என்றும் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, பெந்தோங் மாவட்ட கல்வி முன்னேற்ற கழகம் பொதுமக்களின் உதவியுடன் திரட்டிய 45,102 வெள்ளியை உயர்கல்வி மாணவர்களுக்கான உதவிகளாக வழங்கும் முயற்சியை டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்ததோடு, இக்கழகத்திற்கு தனது சார்பில் ஒரு லட்சம் வெள்ளியை வழங்குவதாக உறுதியளித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பி40 பிரிவில் இருக்கும் இரண்டு உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு நிதியை எடுத்து வழங்கியதோடு தேர்தெடுக்கப்பட்ட 11 மாணவர்களுக்கு மடிக்கணிணிகளையும் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் வழங்கினார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் பேசிய பந்தோங் மாவட்ட கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான சண்முகம் கூறுகையில், பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 14ஆவது ஆண்டாக சிந்தனை செய் மனமே நிகழ்ச்சியைத் தொடர்ந்தாற்போல் மேற்கொண்டு வருவதாகவும் இதுவரையில் பல இந்திய மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இக்கழகம் மிகப் பெரிய சேவையை வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் தொடக்கி வைத்தவர் மலேசியாவின் அப்துல் கலாம் என்று அழைக்கப்பட்ட மறைந்த டத்தோ ஹாஜி தஸ்லிம். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாணவர்களை தேர்தெடுத்து அவர்களுக்கு உதவும் வகையில் நிதி வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய சொன்னார். அவரது வலியுறுத்தலின் பேரில் இப்பொழுது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாணவர்களை இக்கழகம் தேர்தெடுத்து அவர்களின் கல்விக்கு தேவையான நிதியுதவிகளை வழங்கி வருவதாக சண்முகம் சொன்னார். இத்தகைய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்த இலக்கு கொண்டிருப்பதாக கூறிய அவர், இக்கழகத்திற்கு ஆதரவளித்துவரும் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன