கோலாலம்பூர், ஆக.1-
அறம் இயக்கத்தின் 3ஆவது தமிழ் மாநாடான பாவேந்தர் பாரதிதாசன் மாநாடு வருகின்ற 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சிவிக் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காலை மணி 9.00 முதல் மாலை மணி 6.00 வரையில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் உள்நாட்டு மட்டும் வெளிநாட்டு பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், ஆய்வரங்கம், தமிழிசை, நடனம், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான மாறு வேடப் போட்டி முதலானவை இடம்பெறவிருப்பதாக அறம் இயக்கத்தின் தலைவர் நடேசன் வரதன் தெரிவித்தார்.

தமிழ்மொழிக்கு வர்த்தக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் எனும் கருப்பொருளில் 2015ஆம் ஆண்டு முதல் மாநாடுகளை அறம் இயக்கம் நடத்தி வருகின்றது. 2015ஆம் ஆண்டில் வள்ளுவர் விழா, 2016ஆம் ஆண்டில் பாரதியார் மாநாடு ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தியது. அதே போல் இந்த ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மலேசிய தமிழ் நெறி கழகத்தின் தலைவர் திருமாவளவன் உள்பட உள்ளூர் பேச்சாளர்கள், தமிழகத்தைச் சேர்ந்த புலவர் செந்தலை கவுதமன் உள்ளிட்ட பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் இணைப்பேராசிரியர் முனைவர் குமரன் சுப்ரமணியத்தின் தலைமையில் 5 மற்றும் 6ஆம் படிவ மாணவர்களை கொண்ட ஆய்வரங்கம் நடைபெறும்.

இம்மாநாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக சிலாங்கூரில் 96 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கும் வகையில் மாறுவேடப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநில தலைமையாசிரியர் மன்றம், முன்னாள் தமிழாசிரியர்கள் மன்றம் ஆகியவற்றின் ஆதரவோடு சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் டேனியல் அமல்தாஸ் தலைமையில் இப்போட்டி நடைபெறவுள்ளது. திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், ஒளவையார் ஆகிய நால்வரின் மாறுவேடத்தில் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்க வலியுறுத்தப்படுகின்றனர்.

இப்போட்டியில் முதல் பரிசாக 1500 வெள்ளி ரொக்கமும், இரண்டாவது பரிசாக 1000 வெள்ளியும் மூன்றாவது பரிசாக 750 வெள்ளியும் நான்காவது பரிசாக 600 வெள்ளியும் ஐந்தாவது பரிசாக 500 வெள்ளியும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, 6 முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு தலா 100 வெள்ளியும் 13 முதல் 96 வரையில் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா 50 வெள்ளியும் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்படும். அதோடு, 1 முதல் 5ஆம் இடம் வரையில் வெற்றி பெறும் தமிழ்ப்பள்ளிகளுக்கு 1000 வெள்ளி மதிப்பிலான பாவேந்தர் பாரதிதாசனின் தொகுப்பு நூல்கள் வழங்கப்படும். முற்றிலும் இலவசமாக நடைபெறும் இம்மாநாட்டில் தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொள்ள வேண்டுமென நடேசன் கேட்டுக்கொண்டார்.

இம்மாநாடு குறித்த மேல்விவரங்களுக்கு நடேசன் (0123319494), டாக்டர் செல்லையா (0163730545), ஜேன் தனா (0172942083), சீரியநாதன் (0166846207) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.