ஷா ஆலம், ஏப். 28-
கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் பி.கே.ஆர். சின்னத்தில் போட்டியிடவிருக்கும் அமானா கட்சியின் தேசியத் தலைவர் மாட் சாபு தேசிய முன்னணி வேட்பாளர் வீ.குணாளன், பாஸ் வேட்பாளர் முஹம்மட் சியா பஹாருன் ஆகியோரை போட்டியிடவுள்ளார்.

காலை மணி 10.00 அளவில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கோத்தா ராஜா தொகுதிக்கான தேர்தல் நிர்வாகி ஷுக்ரி முஹம்மட் ஹாமின் காலை மணி 11..24 அளவில் அத்தொகுதியில் அந்த மூன்று வேட்பாளர்கள் போட்டியிடவிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் வாயிலாக, கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதி மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளது.

இதனிடையே, செந்தோசா மற்றும் கோத்தா கெமுனிங் ஆகிய சட்டமன்றங்கள் இம்முறை ஐந்து முனை போட்டிகளை எதிர்நோக்கியுள்ளது. இவ்விரு தொகுதிகளில் தேசிய முன்னணி, பாஸ், பி.கே.ஆர், பி.எஸ்.எம், பி.ஆர்.எம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

செந்தோசா தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சுப்ரமணியத்தை (ஆர்.எஸ்.மணியம்) எதிர்த்து பி.கே.ஆரின் டாக்டர் குணராஜ் ஆர்.ஜோர்ஜ், பாஸ் கட்சியின் ராஜன் மணிகேசவன், பி.ஆர்.எம். கட்சியின் எம்.தில்லை அம்பலம், சுயேட்சை வேட்பாளர் பி.சுந்தரராஜூ ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

கோத்தா கெமுனிங் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் தியூ ஹோக் ஹுவாட், பி.எஸ்.எம். கட்சியின் அப்துல் ரசாக் இஸ்மாயில், பாஸ் கட்சியின் புர்ஹான் அட்னான், பி.கே.ஆரின் வீ.கணபதிராவ், சுயேட்சை வேட்பாளர் எஸ்.ராஜசேகரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

சுங்கை கண்டீஸ் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஐ.ஆர். கமாருசாமான் ஜொஹாரியை எதிர்த்து பி.ஆர்.எம். கட்சியின் ஹானாஃபியா ஹூசின், பி.கே.ஆர் கட்சியின் மாட் சுஹாய்மி ஷாபேய், பாஸ் கட்சியின் முஹம்மட் யூசோப் அப்துல்லா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
இந்த தொகுதியில் எந்த வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிப்படவில்லை.