சுங்கை சிப்புட்டை மீட்டெடுக்க முழுவீச்சில் தேவமணி!

சுங்கை சிப்புட், மே 1-

மஇகா சார்பில் தேசிய முன்னணி சின்னத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.இ.கா.வின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி இம்முறை அத்தொகுதியை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

கடந்த முறை சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவினாலும் பிஎஸ்எம்மின் டாக்டர் ஜெயகுமாருக்கும் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணிக்கும் இடையில்தான் போட்டி கடுமையாக இருந்தது. 2,793 வாக்குகள் வித்தியாசத்தில் டத்தோஸ்ரீ தேவமணி தோல்வி கண்டார். தனித்து போட்டியிட்ட நாகலிங்கத்திற்கு 197 வாக்குகளே கிடைத்தது. ஆனால் இம்முறை முக்கியமான 3 கட்சிகள் களம் காண்பதால் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை டத்தோஸ்ரீ தேவமணி வெல்ல வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகின்றது.

3ஆவது முறையாக சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்ள பிஎஸ்எம் டாக்டர் ஜெயகுமார் போட்டியிடுகிறார். அதோடு பிகேஆர் சின்னத்தில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வென்ற கேசவன் சுப்ரமணியம் களமிறங்குகிறார். அதேபோல் பாஸ் கட்சி சின்னத்தில் இஷாக் இப்ராஹிமும் போட்டியிடுவதால் இங்கு 4 முனைப் போட்டி நிலவுகின்றது.

நடப்பு அரசாங்கத்திற்கு எதிரான வாக்குகள் சிதறும் பட்சத்தில் தேசிய முன்னணியின் வேட்பாளரான டத்தோஸ்ரீ தேவமணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடந்த 13ஆவது பொதுத்தேர்தலில் செமினி சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் டத்தோ ஜோஹன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பிகேஆர் சின்னத்தில் ஹமிடி ஹாசன் மற்றும் பிகேஆர் சின்னத்தில் அருள்செல்வம் ஆகியோர் போட்டியிட்டனர்.

அத்தேர்தலில் அருட்செல்வம் 5,568 வாக்குகள் பெற்ற வேளையில் ஹமிடி 13, 471 வாக்குகள் பெற்றார். டத்தோ ஜோகானுக்கு 147,616 வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சிகளின் வாக்கு சிதறியதால் 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் டத்தோ ஜோஹன் வென்றார்.

அதேபோல் இம்முறை சுங்கை சிப்புட் தொகுதியிலும் மாற்றம் வரலாம் எனக் கூறப்படுகின்றது. சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை 55,002 ஆகும். அதில் 34.28 விழுக்காடு மலாய் வாக்காளர்கள், 36.28 விடுக்காடு சீன வாக்காளர்கள், 20.89 விழுக்காடு இந்திய வாக்காளர்கள், 8.55 விழுக்காடு இதர இனத்தை சேர்ந்தவர்கள்.