புதிய பரிணாமத்துடன் மலேசிய அடிதடா சிலம்பம் ஆட்டம் கழகம் திறப்பு விழா கண்டது

0
8

கோலாலம்பூர், மே 2-
பல ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பத்தைக் கற்றுத்தரும் பயிற்சியில் ஈடுபட்டுவந்த கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த சிலம்பக் கழகம் தற்போது மலேசிய அடிதடா சிலம்பம் ஆட்டம் கழகம் என புதிய தோற்றத்தை பெற்று அண்மையில் திறப்பு விழா கண்டது.

இக்கழகத்தின் தலைவராக கோவிந்தராஜூ சுப்பையா பொறுப்பேற்று உள்ளார். அண்மையில், தலைநகரிலுள்ள பிரபல தங்கும் விடுதியில் இக்கழகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபல வர்த்தகரும் இக்கழகத்தின் ஆலோசகருமான டாக்டர் ஷங்கர் வையாபுரி இக்கழகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஷங்கர் வையாபுரி கூறுகையில், சிலம்பம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று என்பதால் அதனை இப்போதைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மிக அவசியம் என தெரிவித்தார். புதிய தோற்றத்தில் செயல்படும் மலேசிய அடிதடா சிலம்பம் ஆட்டம் கழகம் இந்த ஆட்டத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சிகளையும் போட்டிகளையும் நடத்தி வருகிறது. இது தொடரப்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

கோவிந்தராஜூ சுப்பையா கூறுகையில், இதற்கு முன்னர் இக்கழகம் அதன் முன்னாள் தலைவர் மறைந்த கணேசன் அவர்களின் தலைமையில் கூட்டரசு பிரதேசத்தை மையமாக கொண்டு செயல்பட்டது. தற்போது அவரது மறைவிற்கு பின்னர் இக்கழகத்திற்கு புதிய வடிவத்தைக் கொடுக்கும் வகையில் முறைப்படி தேசிய சங்கப் பதிவிலாகாவில் பதிவு செய்து நாடு தழுவிய நிலையில் சிலம்பம் ஆட்டம் தொடர்பான பயிற்சிகளை வழங்கவிருக்கிறோம் என அவர் கூறினார்.

கிளப், மாநிலம், தேசிய அளவில் இந்த பயிற்சிகளை வழங்கி வருவதோடு செந்தூல், மலாவாத்தி, பிளேட்சர், தம்புசாமி ஆகிய தமிழ்ப்பள்ளிகளிலும் பத்து மூடா மற்றும் ஜிஞ்ஜாங் ஆகிய இடங்களிலுள்ள பி.பி.ஆர், அடுக்ககங்களிலும் இந்த பயிற்சிகளை வழங்கி வருகிறோம். தற்போது, முறையான திட்டமிடலோடு இக்கழகத்தை நாங்கள் வழிநடத்தி வருவதால் இதனை எதிர்வரும் காலங்களில் விரிவுபடுத்துவோம் என கோவிந்தராஜூ குறிப்பிட்டார்.

இதனிடையே, இக்கழகத்தின் பொருளாளர் வினோதன் காளிப்பன் கூறுகையில், சிலம்பம் வெறும் விளையாட்டு மட்டும் அல்ல. மாறாக, இந்த விளையாட்டு அதனைக் கற்றுக்கொள்பவர்களிடம் ஒழுக்கத்தையும் நல்ல சிந்தனைகளையும் வளர்க்கின்றது. 19ஆம் நூற்றாண்டில் பாண்டிச்சேரியிலிருந்து வந்த தமிழர்கள் மலேசியாவில் கோலசிலாங்கூர், காப்பார், ரவாங் ஆகிய பகுதிகளில் மறைமுகமாக இந்த கலையை வளர்த்து வந்தனர். அக்காலக்கட்டத்தில் இந்த ஆட்டத்திற்கு அப்போதைய அரசுகளிடம் அனுமதி இல்லை. ஆனால், இக்காலக் கட்டத்தில் இந்த கலையை நம் நாட்டில் வளர்க்க வேண்டிய கடப்பாடு தமிழர்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில், இக்கழகம் புதிய பரிணாமத்தைப் பெற்று செயலாற்றி வருவதாக அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு வருகையாளராக மூர்த்தி கந்தையா, டத்தோஸ்ரீ சப்ரி சாலே முதலானோர் கலந்துக்கொண்டனர்.