முகப்பு > அரசியல் > நான்தான் தலைவர் ஆர்ஓஎஸ் உறுதி! எதிரானவர்கள் அங்கீகாரம் இழப்பர் – டான்ஸ்ரீ கேவியஸ்
அரசியல்முதன்மைச் செய்திகள்

நான்தான் தலைவர் ஆர்ஓஎஸ் உறுதி! எதிரானவர்கள் அங்கீகாரம் இழப்பர் – டான்ஸ்ரீ கேவியஸ்

கோலாலம்பூர், மே 4-

தேசிய சங்கப் பதிவிலாகா தம்மை மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகவும், அதன் காரணமாக கேமரன் மலையில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு தாமும் அழைக்கப்பட்டதாக மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் கூறியுள்ளார்.

நேற்று கேமரன்மலையில் தேசிய முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் டத்தோ சிவராஜ் சந்திரன், பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஆகியோருடன் டான்ஸ்ரீ கேவியஸ் கைகளை உயர்த்திக் காட்டும் நிழல்படல் சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. பிரதமர் கட்சி விவகாரங்கள் குறித்து விளக்கம் கேட்டதாகவும், கேமரன்மலையின் வெற்றிக்கு துணை புரியுமாறு கேட்டுக் கொண்டதாகவும் கேவியஸ் கூறினார்.

இது குறித்து விளக்கம் கேட்க அவரை அநேகன் தொடர்பு கொண்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார். கட்சியை கொல்லைப் புறமாக சிலர் கைப்பற்ற நினைக்கின்றார்கள். ஆனால் அது சட்டத்திற்குப் புறம்பானது. குறிப்பாக ஊடங்களின் முன் கட்சியின் தலைவரை நீக்குவதை ஆர்.ஓ.எஸ். ஏற்றுக் கொள்ளாது என அதிகாரிகளால் தம்மிடம் கூறப்பட்டதாகவும் டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.

இதனிடையே கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் தங்களின் உறுப்பியத்தை தாமாகவே இழந்துவிடுவார்கள் என கட்சி விதி குறிப்பிடுகின்றது. அந்த வகையில் கட்சியிலிருந்து தம்மை நீக்குவதற்கு கையெழுத்திட்ட அனைவரும் கட்சியிலிருந்து விலகும் நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை ஆர்.ஓ.எஸ். முழுமையாக விசாரிக்கின்றது. குறிப்பாக அன்றைய தினம் நடந்த சட்டவிரோதமான உச்சமன்றக் கூட்டத்தில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்ற விவரத்தை திரட்டுகிறார்கள். அதில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்? எதற்கு கையெழுத்திட்டார்கள்? இவர்கள் வற்புறுத்தப்பட்டார்களா? இதன் பின்னணி என்ன? யாரெல்லாம் கூட்டத்திற்கு வராமல் ஆதரவு தெரிவித்தார்கள்? என்றெல்லாம் ஆர்.ஓ.எஸ். விசாரணை நடத்தவிருக்கின்றது என கேவியஸ் கூறினார்.

கட்சியின் உச்சமன்றத்தை முடிவு செய்வது பேராளர் மாநாடுதான். அந்த மாநாட்டின் முடிவை ஊகங்களில் வெளிவரும் அறிக்கையின் மூலம் மாற்ற நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் ஆர்.ஓ.எஸ். உணர்ந்துள்ளது.

தமது எதிராகவும் கட்சிக்கு களங்கத்தை உண்டாக்கும் வகையில் நடந்து கொண்ட அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். முன்னதாகவே தமக்கும் இந்த பிரச்னைக்கும் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை என முறைபடி கடிதம் அனுப்பினால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

துரோகம் இழைத்தார்கள்!

கட்சிக்கு வெளியே இருந்தவர்களை உயரிய பதவி கொடுத்து அலங்கரித்த என்னை மெக்லின் டி குருஸும் மோகன் கந்தசாமியும் முதுகில் குத்திவிட்டார்கள் என கேவியஸ் கூறினார்.

என்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென இந்த இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்னபே முடிவு செய்துவிட்டார்கள். இது குறித்து கட்சி உறுப்பினர்கள் தம்மிடம் கூறியபோதும் அதை நான் நம்பவில்லை.

பல ஆண்டுகளாக என்னுடன் நெருக்கமாக இருந்த இந்த இருவருக்கும் பல்வேறான சலுகைகளையும் உதவிகளையும் நான் வழங்கியுள்ளேன். குறிப்பாக செனட்டர், துணையமைச்சர், டத்தோ விருது என பல சலுகைகளை வழங்கியுள்ளேன் ஆனால் இப்போது, என் முதுகில் குத்திவிட்டார்கள் என கேவியஸ் கூறினார்.

கட்சிப் பணத்தை அனுமதியின்றி செலவழித்து வருகிறார்கள். இது குற்றமாகும். குறிப்பாக கட்சிக்கு ஏதேனும் நிதி வழங்கப்பட்டால் அதை கட்சியின் வங்கி கணக்கில் சேர்க்க வேண்டும். ஆனால் இவர்கள் அந்த விதிமுறையை மீறிவிட்டார்கள் என கேவியஸ் குற்றம் சாட்டினார்.

இத்தனை ஆண்டுகள் கட்சிப் பணத்தை தொகுதிகளுக்கு வழங்கவில்லை. இப்போதுதான் நாங்கள் வழங்குகிறோம் என தொகுதி தலைவர்களையும் குழப்பி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் கட்சியின் நிதி மாநில தலைவர்களுக்குத்தான் வழங்கப்படும்.

எந்த தொகுதியில் யார் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது மாநில தலைவருக்கு மட்டுமே தெரியும் என்பதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடந்த பொதுத் தேர்தலில் அதற்கு பின்னாலும் ஜோகூர் மாநிலத் தலைவர், பினாங்கு மாநிலத் தலைவர் எவ்வளவு பணத்தை வாங்கிச் சென்றார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென்றும் கேவியஸ் வலியுறுத்தினார்.

கட்சியின் பணத்தை நான் கொள்ளையடித்து விட்டேன் என்றால் அதில் மெக்லினுக்கும் மோகன் கந்தசாமிக்கும் பங்குண்டு. கட்சி சார்ந்த நிதிகள் குறித்து இவர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் என்றும் டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன