தேர்தலில் வென்றால் இளைஞர்களின் குரலாக ஒலிப்பேன்! ஹராப்பான் ஆதரவு வேட்பாளர் பிரபாகரன் சூளுரை

0
4

கோலாலம்பூர், மே 5-
மே 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் பத்து தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணியின் ஆதரவோடு சாவி சின்னத்தில் களமிறங்கும் 22 வயதுடைய சட்டத்துறை மாணவர் பிரபாகரன் நாடாளுமன்றத்தில் இளைஞர்களின் குரலாக ஒலிக்கவிருப்பதாக சூளுரைத்தார்.

இது குறித்து தமிழ் ஊடக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், இன்றைய அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது பெரும்பாலானோர் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்ததாக தெரியவில்லை. இளைஞர்களின் தேவைகள் அதிகமாக இருக்கும் நிலையில் அவர்களுக்காக நாடாளுமன்றத்தில் யாரும் பெரிதாக குரல் கொடுத்ததில்லை. இதன் காரணமாக, இத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தாம் முடிவெடுத்ததாக பிரபாகரன் கூறினார்.

ஆனால், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது பத்து தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் போட்டியிடவிருந்த பி.கே.ஆர். உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனுவை நீதிமன்ற அபராதம் காரணமாக தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்தார். இந்நிலையில், சுயேட்சையாக போட்டியிடும் தமக்கு நம்பிக்கைக் கூட்டணி ஆதரவு தெரிவிப்பதாக என்னிடம் முன்வந்து கூறினர். ஆனால், அவர்களிடம் 3 நாள் அவகாசத்தைக் கேட்ட பிறகு என்னுடைய ஆலோசகர் உள்பட எனக்கு முக்கியமானவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு அவர்களின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்தேன்.

இளைஞர் சமுதாயத்திற்காக எனக்கென்று தனிக்கொள்கையையும் கோரிக்கைகளும் உண்டு. அதற்கு அவர்கள் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. நீ சுயேட்சையாக போட்டியிடலாம். நாங்கள் ஆதரவளிக்கின்றோம் என அவர்கள் கூறியதோடு எந்த நிபந்தனைகளையும் அவர்கள் எனக்கு விதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, நேற்று அக்கூட்டணியின் ஆதரவு வேட்பாளராக தியான் சுவா முன்னிலையில் நான் அறிவிக்கப்பட்டு என்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறேன்.

தொடக்கத்தில் சுயேட்சையாக போட்டியிட நினைத்த போது அதில் வெற்றி பெறுவேன் என நான் நினைக்கவில்லை. காரணம், தியான் சுவா போன்ற ஜாம்பவான்களை எதிர்த்து வெற்றி பெறுவது எளிதானது அல்ல என்பது எனக்கு தெரியும். ஆயினும், நான் துணிந்து இந்த இளம் வயதில் அரசியலுக்கு வந்துள்ளதால் என்னை பார்த்து மற்ற இளைஞர்களும் அரசியலில் களமிறங்குவார்கள். ஒரு மாற்றம் ஏற்படும் என நினைத்தேன்.

ஆனால், இப்பொழுது நம்பிக்கைக் கூட்டணியின் ஆதரவோடு களமிறங்குவதால் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு எழுந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லும் போது பல்வேறு தரப்பினர்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். பலர் தொலைப்பேசி வாயிலாக எனக்கு ஊக்கமும் ஆதரவும் தெரிவிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

பத்து தொகுதியை வென்று நாடாளுமன்றத்தில் நான் காலடி வைக்கும் போது தேர்தலில் வாக்களிக்கும் வயது வரம்பை 21இலிருந்து 18க்கு கொண்டு வர குரல் கொடுப்பேன். தொடக்கத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட நினைத்த போது இளைஞர்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தேன். இப்பொழுது நம்பிக்கைக் கூட்டணியின் ஆதரவில் போட்டியிடவிருப்பதாலும் பத்து தொகுதி மக்களின் துன்பத்தையும் துயரத்தையும் அறிந்து வைத்திருப்பதாலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்.

குறிப்பாக, பத்து தொகுதியிலுள்ள இந்தியர்களின் பிரச்னைகள், வீட்டுடமை, குடியிருப்பு பகுதிகளில் பாம்பு உள்ளிட்டவைகளின் அச்சுறுத்தல், வேலை வாய்ப்புகள், இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகள் என பல்வேறு திட்டங்களைத் தாம் கொண்டிருப்பதாக பிரபாகரன் கூறினார்.

எனினும், பத்து தொகுதியில் வெற்றி பெற்ற பின்னரே அந்த கூட்டணியில் இணைவது குறித்து முடிவெடுப்பேன். இப்போதைக்கு தேர்தல் பிரச்சாரங்களில் தாம் கவனம் செலுத்தி வருவதாக பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரியில் சட்டத்துறையில் பயின்றுவரும் பிரபாகரன் குறிப்பிட்டார்.