கோலாலம்பூர், ஆக. 1
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி மீதும் தேசியப் பதிவிலகாவின் (என்ஆர்டி) தலைமை இயக்குனர் மீதும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பற்றிய தனிப்பட்ட விவரங்களைத் துஷ்பிரயோகம் செய்ததாகப் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

என்ஆர்டி தலைமை இயக்குனர் தமக்கு மகாதீரின் அடையாள அட்டையின் பிரதி ஒன்றை அனுப்பியதாகவும் அதில் Mahathir a/l Iskandar Kutty (மகாதீர் த/பெ இஸ்கண்டார் குட்டி) என்றிருப்பதாக சொன்னதும் தீய நோக்கத்துடன் கூறப்பட்டதாகும் என்று டத்தோ கைருடின் அபு ஹசான் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் போலீசில் புகாரில் செய்துள்ளார்.

அப்படிக் கூறியதன் வழி ஜாஹிட்டும் என்ஆர்டி தலைமை இயக்குனரும் தனிப்பட்டவரின் விவரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிவிட்டதாக கைருடின் கூறினார்.

அரசியல் நோக்கத்துக்காகத் தனிப்பட்ட விவரங்களைத் துணைப் பிரதமரும் என்ஆர்டி தலைமை இயக்குனரும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், மலேசியர்களின் தனிப்பட்ட விவரங்களை வைத்துக் கேலி செய்யக்கூடாது. அவற்றை, பகிரங்கமாக, அதுவும் குறிப்பாக அரசியல் கூட்டங்களில் வெளிப்படுத்தவும் கூடாது என்றும் கைருடின் குறிப்பிட்டார்.