கோலாலம்பூர், ஆக.2 –
2017 சீ விளையாட்டுப் போட்டி இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ள வேளையில் அந்தப் போட்டிக்காக தாம் படப்படப்புடன் காத்திருப்பதாக இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியை மலேசியா ஏற்று நடத்தவுள்ள வேளையில் அதற்கான இறுதி கட்டப் பணிகளில் தமது அமைச்சு ஈடுபட்டுள்ளதாக கைரி சொன்னார்.
தென்கிழக்காசியாவில் உள்ள 10 நாடுகள் மட்டுமே போட்டியில் பங்கேற்றாலும் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியைக் காட்டிலும் அதிகமான விளையாட்டுகள் சீ போட்டியில் இடம் பெற்றிருப்பதையும் கைரி சுட்டி காட்டினார்.
இம்முறை சீ விளையாட்டுப் போட்டியில் விளையாட்டாளர்கள், அதிகாரிகள், பயிற்றுனர்கள் என 15 ஆயிரம் பேர் கோலாலம்பூரில் திரள விருக்கின்றனர். மலேசிய விளையாட்டாளர்களின் அடைவுநிலையைத் தவிர்த்து உணவு , தங்குமிடம், போக்குவரத்து போன்ற பல்வேறு விசயங்களில் தாமும் சீ போட்டியின் ஏற்பாட்டுக் குழுவான மசோக்கும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக கைரி கூறினார்.
ஆகஸ்ட் 19 ஆம் தேதி சீ விளையாட்டுப் போட்டி அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ள வேளையில் 14 ஆம் தேதி வலைப்பந்து,  கால்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளன.