புத்ராஜெயா, மே 10-
14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று 16 இந்தியர்கள் நாடாளுமன்றத்தில் மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்கிறார்கள். குறிப்பாக 60 ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தை கொண்டிருந்த தேசிய முன்னணியிலிருந்து மஇகாவை பிரதிநிதித்த டத்தோஸ்ரீ சரவணன், டத்தோ சிவராஜ் ஆகியோரும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே நம்பிக்கை கூட்டணியிலிருந்து (பக்காத்தான் ஹராப்பான்) கஸ்தூரி பட்டு, ராயர், ராம்கர்பால், கேசவன், குலசேகரன், சிவகுமார், கோபின் சிங், சிவராசா, சார்லஸ் சந்தியாகோ, சேவியர் ஜெயகுமார், டெனியல் பாலகோபால், எட்மன் சந்தாரா உட்பட பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற 22 இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பிரபாகரனும் அடங்குவார்.

தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் 614 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவருக்கு 16,086 வாக்குகள் கிடைத்த வேளையில் பிகேஆர் கட்சி வேட்பாளருக்கு 15,472 வாக்குகள் கிடைத்தன. பாஸ் கட்சி வேட்பாளருக்கு 4,616 வாக்குகள் கிடைத்தன. ஐமுனை போட்டி நிலவிய கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ சிவராஜ் சந்திரனுக்கு 10,307 வாக்குகள் கிடைத்த வேளையில் பிகேஆர் வேட்பாளர் மனோகரனுக்கு 9,710 வாக்குகள் கிடைத்தன. 597 வாக்குகள் வித்தியாசத்தில் சிவராஜ் வெற்றி பெற்றார்.

இதனிடையே பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியை தற்காத்துக் கொள்ள போட்டியிட்ட கஸ்தூரி பட்டு அபார வெற்றி பெற்றார். அவருக்கு 42,683 வாக்குகள் கிடைத்த வேளையில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட கெராக்கானின் ஜெயந்திக்கு 9,130 வாக்குகள் கிடைத்தன. 33,553 வாக்குகள் பெரும்பான்மையில் கஸ்தூரி பட்டு வெற்றி பெற்றார்.

பினாங்கில் ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் சனீஸ்வர நேதாஜி ராயர் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் பல்ஜீட் சிங்கை 38,171 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வீழ்த்தினார். ராயருக்கு 50,700 வாக்குகள் கிடைத்த வேளையில் பல்ஜிட் சிங்கிற்கு 12,529 வாக்குகள் கிடைத்தன.

புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கர்ப்பால் சிங்கின் புதல்வர் ராம்கர்ப்பால் 65,622 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் லாவ் ஜோ ஹியாப்பிற்கு 9,671 வாக்குகள் கிடைத்தன. 55,951 வாக்குகள் பெரும்பான்மையில் ராம் கர்பால் புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத்தை கைப்பற்றினார்.

கெடாவில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் வேட்பாளர் கருப்பையா முத்துசாமி வெற்றி பெற்றார். அவருக்கு 31,724 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் 15,449 வாக்குகள் பெற்ற நிலையில் பாஸ் கட்சி வேட்பாளருக்கு 22,911 வாக்குகள் கிடைத்தன. 8,813 வாக்குகள் பெரும்பான்மையில் கருப்பையா வெற்றி பெற்றார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் வேட்பாளர் கேசவன் 5,607 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணிக்கு 15,210 வாக்குகள் கிடைத்தன. 2 முறை சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற பிஎஸ்எம்மின் மைக்கல் ஜெயகுமாருக்கு 1,505 வாக்குகளே கிடைத்தன.

ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் வழக்கறிஞர் குலசேகரன் தற்காத்துக் கொண்டார். அவருக்கு 55,613 வாக்குகள் கிடைத்த வேளையில் தேசிய முன்னணி வேட்பாளர் செங் வேய் ஹீக்கு 9,889 வாக்குகள் கிடைத்தன. 45,724 வாக்குகள் வித்தியாசத்தில் குலசேகரன் வெற்றி பெற்றார். பத்துகாஜா நாடாளுமன்றத்தை நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் சிவகுமார் கைப்பற்றினார். சிவகுமாருக்கு 52,850 வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் லியோங் சீ வேய்க்கு 8,982 வாக்குகள் கிடைத்தன. 43,868 வாக்குகள் வித்தியாசத்தில் சிவகுமார் அபார வெற்றி பெற்றார். இத்தொகுதியில் போட்டியிட்ட பிஎஸ்எம் வேட்பாளர் குணசேகரனுக்கு 955 வாக்குகள் கிடைத்தன.

பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் கோபின் சிங் வெற்றி பெற்றார். அவருக்கு 60,429 வாக்குகள் கிடைத்த வேளையில், தேசிய முன்னணி வேட்பாளர் ஹங் சின் தாட் 12,794 வாக்குகள் பெற்றார். 47,635 வாக்குகள் வித்தியாசத்தில் கோபின் சிங் வெற்றி பெற்றார். சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் வழக்கறிஞர் சிவராசா வெற்றி பெற்றார். அவருக்கு 43,631 வாக்குகள் கிடைத்த வேளையில், பாஸ் கட்சி வேட்பாளர் நூரிடா சாலேவிற்கு 16,997 வாக்குகள் கிடைத்தன. தேசிய முன்னணி வேட்பாளர் பிரகாஷ் ராவ்விற்கு 16,681 வாக்குகள் கிடைத்தன. இங்கு 26,634 வாக்குகள் வித்தியாசத்தில் சிவராசா வெற்றி பெற்றார்.

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியை நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் சார்லெஸ் சந்தியாகோ மீண்டும் தக்க வைத்துக் கொண்டார். அவருக்கு 98,279 வாக்குகள் கிடைத்தன. தேசிய முன்னணி வேட்பாளர் சின் இயூ பூன்னுக்கு 19,506 வாக்குகள் கிடைத்தன. நான்கு முனை போட்டி நிலவிய இத்தொகுதியை 78,773 வாக்குகள் பெரும்பான்மையில் சார்லெஸ் சந்தியாகோ கைப்பற்றினார்.

சிலாங்கூரின் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் கோல லாங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். அவருக்கு 43,239 வாக்குகள் கிடைத்த வேளையில் தேசிய முன்னணி வேட்பாளர் ஷாரில் ஹம்டானுக்கு 26,127 வாக்குகள் கிடைத்தன. மும்முனை போட்டி நிலவிய இத்தொகுதியில் சேவியர் ஜெயகுமார் 17,112 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ வி.எஸ். மோகனை எதிர்த்து போட்டியிட்ட டேனியல் பாலகோபால் அப்துல்லா 36,225 பெற்றார். வி.எஸ். மோகனுக்கு 18,515 வாக்குகள் கிடைத்தன. மும்முனை போட்டி நிலவிய இத்தொகுதியில் 17,710 வாக்குகள் வித்தியாசத்தில் டேனியல் பாலகோபால் அப்துல்லா வெற்றி பெற்றார்.

ம.இ.கா. தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தை எதிர்த்து சிகாமாட் தொகுதியில் போட்டியிட்ட எட்மன் சந்தாரா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 24,060 வாக்குகள் கிடைத்தன. டாக்டர் சுப்ரமணியத்திற்கு 18,584 வாக்குகள் கிடைத்தன. மும்முனை போட்டி நிலவிய இத்தொகுதியில் 5,476 வாக்குகள் வித்தியாசத்தில் எட்மன் சந்தாரா வெற்றி பெற்றார்.

இதனிடையே பத்து தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பிரபாகரன் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு பிகேஆர் முழுமையான ஆதரவை தெரிவித்ததன் வழி 38,125 வாக்குகளை அவர் பெற்றார். இத்தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் டோமினிக் லாவ்விற்கு 10,849 வாக்குகள் கிடைத்தன. மும்முனை போட்டி நிலவிய இத்தொகுதியில் 24,438 வாக்குகள் பெரும்பான்மையில் பிரபாகன் வெற்றி பெற்றார்.

இம்முறை நடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. நம்பிக்கை கூட்டணியில் 13 இந்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இவர்களில் யார் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்பதுதான் இப்போது முதன்மை கேள்வியாக எழுந்துள்ளது.

1 COMMENT

  1. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். நாடளுமன்றத்தில் குரல் கொடுக்க இத்தனைப் பேர் இருக்க முழு அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் எத்தனைப் பேர் இருப்பர்? முன்னால் ஆளுங்கட்சி இருந்த போது நமக்காக குரல் கொடுக்க ஒரு கட்சி இருந்தும் 60 ஆண்டுகள் வாழ்ந்தும் வாழாமலும் நமது உரிமைகள் இருந்தும் இல்லாமலும் என பல போராட்டங்களைச் சந்தித்தோம். இம்முறையும் இந்நிலை தொடருமா அல்லது மாறுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் சுய லாபம் பாராமல் மக்களுக்கென உழைப்பர் என பெரிதும் எதிர்பார்க்கிறேன். #Kavikaadhali #GodBlessMalaysia

Comments are closed.